பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் அவசியம்: ஆசிரியர்கள் யோசனை
பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் அவசியம்: ஆசிரியர்கள் யோசனை
UPDATED : ஜன 30, 2010 12:00 AM
ADDED : ஜன 30, 2010 12:50 PM
நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும்போது, பள்ளி மாணவர்களில் சிலர் அவ்வப்போது தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர். விடுமுறை மற்றும் கோடை காலங்களில் பிக்னிக், சுற்றுலா என செல்லும் சிறுவர்கள், நீச்சல் தெரியாமல் பலியாகும் போக்கு சமீபகாலத்தில் அதிகமாக உள்ளது.
இதனால் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பது அவசியம் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். மாணவர்களில் கிராமப் பகுதிகளில் 50 சதவீதம், நகரப் பகுதிகளில் 75 சதவீதம் பேர் நீச்சல் தெரியாமல் உள்ளனர். நகரப் பகுதிகளில் பெற்றோருக்கே நீச்சல் தெரியாத நிலை, தேவையான நீர் நிலைகள் இல்லாமை போன்ற காரணங்களால் பலர் நீச்சல் கற்றுக் கொள்ள இயலவில்லை.
இம்மாணவர்கள் ஆறு, குளம், கண்மாய், அணைப்பகுதி போன்ற நீர்நிலைகளில் ஆபத்தான காலகட்டத்தில் தப்பிக்க முடியாமல் உயிரிழக்கின்றனர். உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக செயலாளர் எஸ்.பாஸ்கரன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர் கூறியதாவது: மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி உடற்பயிற்சி வகுப்புகளிலேயே யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைப் போல நீச்சல் பயிற்சியும் அவசியம் அளிக்க வேண்டும். இதனால் மாணவர்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவியாக இருப்பதுடன், அவர்களுக்கு உடற்பயிற்சி போலவும் அமையும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, இளமைப் பருவத்திலேயே நீச்சல் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும். இதற்காக நீச்சல் பயிற்சி உபகரணங்களை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம்இளவயதினர் நீரில் மூழ்கி இறப்பதை தவிர்க்கலாம் என்றனர்.
