ஆதித்யா எல்1 விண்கல விஞ்ஞானிகள் மாணவ - மாணவியருடன் கலந்துரையாடல்
ஆதித்யா எல்1 விண்கல விஞ்ஞானிகள் மாணவ - மாணவியருடன் கலந்துரையாடல்
UPDATED : செப் 05, 2023 12:00 AM
ADDED : செப் 05, 2023 01:30 PM
சென்னை:
சூரியன் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் நான்கு விஞ்ஞானிகள், பிர்லா கோளரங்கத்தில், மாணவ - மாணவியருடன் உரையாடினர்.சூரியன் குறித்து விரிவாக ஆய்வு செய்ய, ஆதித்யா எல்1 விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி., சி57 ராக்கெட் உதவியுடன் நேற்று முன்தினம் இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது.இந்த விண்கலத்தில் பணியாற்றிய, நான்கு விஞ்ஞானிகளுடன் மாணவ - மாணவியர் உரையாடும் நிகழ்ச்சி, நேற்று, சென்னை பிர்லா கோளரங்கத்தில் நடந்தது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு அரங்கத்தில் உரையாடல் நடந்தது. தமிழ் உரையாடலில், விஞ்ஞானிகள் ராஜகுரு, ரவீந்தர் பங்கேற்றனர். ஆங்கில உரையாடலில், திபேன்துா, திபன்கர் ஆகிய விஞ்ஞானிகள் பங்கேற்றனர். ஆதித்யா எல்1 விண்கலத்தின் உதிரிபாகங்கள், சூரியனின் ஒளி மற்றும் நிறமண்டலங்கள், வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் குறித்து திரையில் காட்டி விளக்கப்பட்டது.ஆதித்யா எல்1 விண்கலத்தின் பயன்பாடுகள், இதனால் சூரியனை எவ்வாறு ஆய்வு செய்ய முடியும், இதனால் மக்களுக்கு என்னென்ன பயன் என, மாணவ - மாணவியர் கேள்வி எழுப்பினர். இதற்கு, அந்தந்த விஞ்ஞானிகள் பதில் அளித்தனர்.இது குறித்து விஞ்ஞானி ராஜகுரு கூறியதாவது:
மாணவ - மாணவியர் அறிவியல் பூர்வமாக கேள்வி எழுப்பினர். ஆதித்யா எல்-1 என்ன செய்யப்போகிறது, எதனால் இதை தயாரித்தோம் என விளக்கினோம். பூமி, சூரியனின் ஈர்ப்பு சக்தி குறித்து கூறினோம். சூரியன், அதை சுற்றி உள்ள கிரகங்களில் இருந்து வெளியேறும் காந்த விசையை ஆய்வு செய்வதை பேசினோம். எல்லா மாணவ - மாணவியரும் சூரியன் எப்படி இயங்குகிறது என, தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியை, பிர்லா கோளரங்க இயக்குனர் லெனின்தமிழ் கோவன், பேராசிரியர் சுடலை முன்னின்று நடத்தினர். கண் எரிச்சல், பாதிப்பு ஏற்படுவதால் சூரியனை நேரடியாக பார்ப்பதை தவிர்ப்பர். இந்த சூரியனை டெலஸ்கோப் உதவியுடன் பார்க்க, பிர்லா கோளரங்கத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வமுடன் பார்த்தனர்.
