UPDATED : ஆக 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: குரூப்-1 தேர்வு எழுத 70 க்கும் மேற்பட்டோரை சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது.
ஆரம்பகட்ட தேர்வில், இவர்கள் பெறும் கட்-ஆப் மதிப்பெண்களைப் பொறுத்தே இறுதி தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குரூப்-1 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் முதல் நிலை தேர்வு நடந்தது. ஏப்ரல் மாதம் இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில், 32 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
சில கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகள் தவறானவை என்றும், சில கேள்விகளே தவறானவை என்றும் அந்த மனுக்களில் கூறப்பட்டன. இந்த குளறுபடிகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி.,க்கு மனுக்கள் அனுப்பியும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தங்களுக்கு சரியான மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இம்மனுக்களை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்தார். வழக்கு தொடுத்தவர்களை பிரதான தேர்வு எழுத அனுமதித்தார். சர்ச்சைக்குரிய கேள்விகள், பதில்களை ஆராய நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் குழுவின் முடிவின்படி மனுதாரர்களின் விடைத்தாள்களை திருத்த வேண்டும் என்றும் அதில் கட்-ஆப் மதிப்பெண்களை பெற்றால், இறுதி தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தலாம் என்றும், இல்லையென்றால் விடைத்தாள்களை திருத்த வேண்டியதில்லை என்றும் உத்தரவிட்டார்.
வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டது.
இதையடுத்து, மேலும் 70 பேர் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். தங்களையும் பிரதான தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரினார். இம்மனுக்களை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வக்கீல் அருள் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வரும் 16, 17ம் தேதிகளில் நடக்க இருக்கும் இறுதி தேர்வை எழுத மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். 14ம் தேதி மாலை 5 மணிக்குள் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் செயலரிடம் இருந்து ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி.,யின் வக்கீல் அருள் தெரிவித்துள்ளார்.
மனுதாரர்களை பிரதான தேர்வு எழுத அனுமதிப்பதால், அதை கோர்ட் அங்கீகரித்ததாக அர்த்தம் அல்ல. இவர்கள் எழுதும் இறுதி தேர்வின் விடைத்தாள்களை தனியாக சீலிட்ட கவரில் வைக்க வேண்டும்.
முதல் நிலை தேர்வின் கேள்வித்தாள், விடைத்தாளில் உள்ள தவறுகளை குறிப்பிட்டு தனித்தனியே டி.என்.பி.எஸ்.சி.,க்கு மனுதாரர்கள் மனுக்கள் அனுப்ப வேண்டும்.
அதில் அவர்களின் பெயர், முகவரி, பதிவு எண்கள், கேள்வி எண்கள், கீ விடைத்தாளில் உள்ள சந்தேகம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். 14ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் இந்த மனுவை டி.என்.பி.எஸ்.சி., செயலரிடம் வழங்க வேண்டும். மனுக்களைப் பெற்ற பின்னர் அவற்றை நிபுணர் குழு முன் தாக்கல் செய்ய வேண்டும். குழு இறுதி முடிவெடுக்கும். அதன்படி தேவையான மதிப்பெண்கள் வழங்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி., நிர்ணயித்த கட்-ஆப் மதிப்பெண்களை மனுதாரர்கள் பெற்றிருந்தால், இறுதி தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்படும். இல்லையென்றால், அவற்றை திருத்த வேண்டியதில்லை.
குறிப்பிட்ட கால கெடுவுக்குள் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆட்சேபனைகளை அளிக்க வேண்டும், ஹால் டிக்கெட்டுகளை பெற வேண்டும். இல்லையென்றால் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள சலுகைகளை பெற அவர்களுக்கு உரிமையில்லை. இவ்வாறு நீதிபதி ஜோதிமணி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

