UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 05:28 PM
சென்னை:
நிலங்களுக்கான பட்டா உட்பிரிவு பணிகளை மேற்கொள்ள, பொறியியல் பட்டதாரிகள் 1,231 பேருக்கு, நில அளவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான விண்ணப்பங்கள் வருகை, நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இதில் ஒரு நிலம், பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படும் நிலையில், உட்பிரிவு பட்டா கோரி, மக்கள் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு, நிலத்தை நில அளவையாளர் நேரில் சென்று அளந்து, எல்லைகளை வரையறுக்க வேண்டும்.
ஆனால், தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில், குறுவட்ட நிலையில் நில அளவர்கள் இருக்கின்றனர். கிராமத்துக்கு ஒருவர் வீதம் நில அளவர் இருந்தால் மட்டுமே, இப்பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, நில அளவை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இத்துறையில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில், வெளியாட்களை ஈடுபடுத்த முடிவானது. இதற்காக, கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு, நில அளவை பணி குறித்த பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1,231 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தாலுகா அளவில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
உட்பிரிவு கோரி வரும் கோப்புகளில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க இவர்கள் பயன்படுத்தப்படுவர். முடிக்கப்படும் கோப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், இவர்களுக்கான தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் பார்க்க முடியாது
நில அளவை பணிக்கு பொறியாளர்களை உரிமம் அடிப்படையில் செயல்பட அனுமதித்து இருப்பது நல்லது தான். இருப்பினும், இவர்கள் யார்? எங்கு செயல்படுகின்றனர் என்பது, மக்களுக்கு தெரியாத நிலை தான் உள்ளது.
தங்கள் நிலத்தின் எல்லைகளை சரிபார்ப்பது போன்ற பணிகளுக்கு, இது போன்ற உரிமம் பெற்ற பொறியாளர்களை, நியாயமான கட்டணத்தில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான், இதன் பயன் மக்களுக்கு தெரியவரும் என கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறினார்.