UPDATED : ஜூலை 16, 2026 07:03 PM
ADDED : ஜூலை 16, 2026 07:04 PM
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், ஜூலை 17ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை காலை 10:00 மணி முதல் மாலை 03:00 வரை, சிறு அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளன.
முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முகாமில், 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்று, தனியார் துறையில் குவாலிட்டி இன்ஜினியர், பராமரிப்பு மேலாளர், சூப்பர்வைசர், அக்கவுன்ட்ஸ் எக்சிகியூட்டிவ், ஆப்பரேட்டர், எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், சி.என்.சி., ஆப்பரேட்டர் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகளை பெறலாம்.
இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
