UPDATED : மே 13, 2011 12:00 AM
ADDED : மே 13, 2011 12:22 PM
சிவகங்கை: தமிழகத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தில் 2015க்குள் 1,944 நடுநிலைப்பள்ளிகளை புதிதாக துவக்க, மத்திய அரசு 625 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மாநிலத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தில் வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வகம், நூலகம், கழிப்பிடம் கட்ட இத்தொகையை அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் குறித்து பாரதிதாசன் பல்கலையுடன் சேர்ந்து கல்வித்துறையினர் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் கூடுதலாக 1,944 நடுநிலைப்பள்ளிகள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 200 பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,744 பள்ளிகளை 2011 - 12 முதல் 2015ம் ஆண்டிற்குள் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டட வசதி: இப்பள்ளிகளுக்கு 1,851 கூடுதல் வகுப்பறைகள், 698 பள்ளிகளில் அறிவியல் ஆய்வுக்கூடம், 735 கம்ப்யூட்டர் ஆய்வகம், 860 பள்ளிகளில் கைவினை பொருள் தயாரிக்கும் அறைகள், 837 நூலகங்கள், 474 கழிப்பிடங்கள், 213 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 381 பள்ளிகள் பழுது பார்க்கப்படும். புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்கு 2,752 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மத்திய அரசின் இத்திட்டத்தால், அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் புதிய பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், அடிப்படை கல்வி, கிராமங்களை சென்று சேரும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
