UPDATED : ஜூன் 05, 2021 12:00 AM
ADDED : ஜூன் 05, 2021 01:22 PM
விழுப்புரம்:
பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கொரோனாவால், இன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். மொபைல் போனில் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கலாம் என்று பழக்கத்தை முற்றிலுமாய் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கற்றல் திறனை கண்டுபிடிப்பதற்கு தேர்வு முறைதான் சிறந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தாலும், பிளஸ் 2வில் மட்டுமாவது தேர்வு நடத்திடவேண்டும்.
பிளஸ் 2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கும் நிலை ஏற்பட்டால், அது நிச்சயம் பரிதாபம் தான். இதேபோன்று, கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கல்லுாரிக்கு வராமலேயே ஆன்லைன் மூலம் படித்து தேர்வை, புத்தகத்தைப் பார்த்து எழுதும் நிலை உள்ளது.
இந்த மாணவர்களின் தரம் எப்படி இருக்கும். இவர்களுக்கு கல்வி தரத்தின் மேல் நிச்சயம் நம்பிக்கை இருக்காது. கல்வியியல் கல்விக்கும் இதே நிலைதான். எனவே, ஒரு மாதம் கூட காத்திருந்து, கொரோனா தாக்கம் குறைந்ததும் தேர்வுகளை நடத்துவது தான் சிறந்ததாக இருக்கும். தமிழக அரசு பிளஸ் 2 தேர்வை நிச்சயம் நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
