திருப்பூரில் 200 கவுரவ விரிவுரையாளர்கள் உண்ணாவிரதம்
திருப்பூரில் 200 கவுரவ விரிவுரையாளர்கள் உண்ணாவிரதம்
UPDATED : செப் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் கவுரவ விரிவுரையாளர்கள் செப்., 17ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரி, கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 40 பேர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரியில் 34 பேர் என மொத்தம் 74 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு மாத சம்பளமாக நான்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. கவுரவ விரிவுரையாளர்களின் பணி நியமனம் குறித்த அரசின் அறிவிப்போ, கல்வித்துறையின் ஒப்புதலோ இல்லை.
நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, முதற்கட்டமாக ஆர்ப்பாட்டமும், இரண்டாம் கட்டமாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். எனினும், தொடர்ந்து அதே நிலை நீடித்ததால், 8ம் தேதி முதல் கல்லூரிகளுக்குச் செல்லாமல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு என சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்; யு.ஜி.சி., அடிப்படையில் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கோவை, உடுமலை, திருப்பூர், ஊட்டி, கரூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
காலை 10.00 மணிக்கு துவங்கி, மாலை 5.00 மணி வரை நடந்த இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மற்றும் அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நிசார் அகமது, மனோகரன், செல்லதுரை உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கல்லூரிகளில் வகுப்புகள் நடப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் இல்லாததால் சில வகுப்புகள் நடக்கவில்லை.
மற்ற பாட ஆசிரியர்களின் வகுப்புகளையும் மறுத்து மாணவ, மாணவியர் வெளியேறியதால் கல்லூரி முழுமையாக செயல்படவில்லை.
