சேலத்தில் 22 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம்: மாணவர்கள் பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு
சேலத்தில் 22 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம்: மாணவர்கள் பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடு
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 10:21 AM
சேலம்: நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் மாவட்டத்தில், 22 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், அருகில் உள்ள பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள், 1999ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டது. இதற்காக, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், எல்காட் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அவர்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், 2008 அக்டோபர் 12 மற்றும் 2010 ஜனவரி 24 ஆகிய தேதிகளில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில், 50 சதவிகிதத்துக்கும் கீழ் மதிப்பெண் பெற்ற கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, தமிழகம் முழுவதும் சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் 22 பள்ளிகளில் பணிபுரிந்து வந்த தேர்ச்சி பெறாதவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இப்பள்ளிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக, அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை மாற்றுப்பணியில் ஈடுபடுத்த, மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காலிப்பணியிடம் உள்ள பள்ளிக்கு, அருகில் உள்ள பள்ளி ஆசிரியர் வாரத்துக்கு, இரண்டு நாட்கள் வந்து பாடம் நடத்துவார். அடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் வரை, இதே நிலை தொடரும், என எதிர்பார்க்கப்படுகிறது.