மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவால் தேர்வு முகமை அதிரடி
மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவால் தேர்வு முகமை அதிரடி
UPDATED : மே 13, 2026 03:23 PM
ADDED : மே 13, 2026 03:26 PM

சென்னை:
நாடு முழுதும் கடந்த, 3ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வின் வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
அதன்படி, 2026 - 27ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு, கடந்த 3ம் தேதி நடந்தது. நாடு முழுதும், 552 நகரங்களிலும், வெளிநாடுகளில், 14 இடங்களிலும் என, 5,432 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை, 22.79 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வதாக, தேசிய தேர்வு முகமை அதிரடியாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து எழுந்த புகார்களை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முறைகேடான தேர்வை அனுமதிப்பது, கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை சிதைக்கும். எனவே, நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது .
கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வு செல்லாது. இதற்கான மறுதேர்வு விரைவில் நடத்தப்படும். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தேவையான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படும்.
மறுதேர்வு அறிவிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், இத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே விண்ணப்பித்த விபரங்கள் அப்படியே எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்கள் தேர்வு எழுதிய, அதே மையங்கள் தேர்வர்களுக்கு ஒதுக்கப்படும்.
மறுதேர்வுக்கான கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய தேர்வு கட்டணம் திருப்பி தரப்படும். மறுத்தேர்வுக்கான முழு செலவையும் தேசிய தேர்வு முகமை, சொந்த நிதியிலிருந்து ஏற்கும்.
மறுதேர்வுக்கான தேதி மற்றும் ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள், பெற்றோர் ஆகியோர், சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களையும், https://neet.nta.nic.in; https://www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மருத்துவம் மற்றும் கால்நடை, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கை தாமதமாகியுள்ளது.
மேலும், நீட் தேர்வில் போதியளவில் மதிப்பெண் பெறாத மாணவர்கள், இன்ஜினியரிங், நர்சிங் போன்ற படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுவர். அவர்களுக்கும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
