UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM
ADDED : ஜூலை 29, 2023 11:01 AM
நாமக்கல்:
திருச்சியில் நடக்கும் வேளாண் கண்காட்சியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும் வேளாண் இணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக வேளாண் துறை, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2023-24ம் ஆண்டுக்கான சட்டசபை மானிய கோரிக்கையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்பு கூட்டு தொழில் நுட்பங்கள் குறித்து கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் பயன்பெறும் வகையில், திருச்சியில் மாநில அளவிலான விவசாய கண்காட்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று முதல் வரும் 29 வரை மூன்று நாட்கள் திருச்சி கேர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், வேளாண் சங்கமம் நடக்கிறது. அதில், வேளாண்மையை எளிமைப்படுத்தும் வகையில், நவீன தொழில் நுட்பங்கள். விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில், வேளாண் பொருட்கள் மதிப்புக்கூட்டு தொழில் நுட்பங்கள், நவீன வேளாண் இயந்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கண்காட்சியல் இடம் பெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், திருச்சி கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
