கர்நாடகாவில் 35 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு
கர்நாடகாவில் 35 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு
UPDATED : ஜூலை 29, 2014 12:00 AM
ADDED : ஜூலை 29, 2014 11:45 AM
பெங்களூரு: கர்நாடகாவில், 35 ஆயிரம் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து குறைவாக உள்ளதாக, பொது சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொது சுகாதார அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், அங்கன்வாடிகளுக்கு வழங்கப்படும் 287 உணவு தானியங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 29 உணவு தானியங்கள் பாதுகாப்பற்றது; 8 உணவு தானியங்கள் தரமற்றவை; 115 உணவு தானியங்கள் போலியான பெயரில் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரியவந்தது.
பரிசோதனை: கடந்த, 2013ல், அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு முன், வினியோகிக்கப்பட்ட உணவு தானியங்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பொது சுகாதார அமைப்பு தலைமை உணவு ஆய்வாளர் நஞ்சுண்டையா கூறியதாவது: கிச்சடி, சாம்பார் போன்றவைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும், துவரம் பருப்பு மாதிரிகளை பரிசோதித்தபோது, அவை பாதுகாப்பற்றது என்பது தெரிந்தது.
கோதுமை பாயசம் வைத்தபோது, கோதுமையின் மீது, சிந்தடிக் லெமன் யெல்லோ பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. இது, கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றதல்ல; கருவில் வளரும் குழந்தைகளை பாதிக்கும்; குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து பலவீனத்தை ஏற்படுத்தும்.
குறிப்புகள் ஏதும் இல்லை: பாக்கெட் பொருட்கள் மீது, பேட்ச் எண், தயாரிப்பு தேதி, எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் ஏதும் இல்லை. ஏனெனில், இவையனைத்தும், அரசு மூலம் கொள்முதல் செய்வதால், தயாரிப்பு கம்பெனி குறித்த தகவல் ஏதுமில்லை. 115 பொருட்களில், தயாரிப்பு விவரங்களே இல்லை. கர்நாடகாவில், 34,594 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு உள்ளதாக கண்டறியப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு, இந்த பொருட்கள் தரமானவை அல்ல என்பது தெரியும்; ஆனால், அவர்கள் மறுப்பேதும் தெரிவிப்பதில்லை. இந்த அங்கன்வாடிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையை சார்ந்தது என்றாலும், பொருட்களின் தரம் குறித்து, அவர்கள் பரிசோதனை செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநில அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில தலைவர், வரலட்சுமி கூறியதாவது: இந்த பொருட்கள் அனைத்தையும் ஏற்கும்படி, உள்ளூர் அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்களை பலவந்தப்படுத்துகின்றனர். பெரும்பாலும், இந்த உணவு தானியங்கள், மாலை நேரத்தில் அல்லது ஞாயிற்றுகிழமைகளில்தான் அனுப்பப்படுகின்றன. அப்போது, இந்த பொருட்களை வாங்க, மூத்த ஊழியர்கள் யாரும் இருப்பதில்லை. சமையல்காரர்கள் தான், இவைகளை வாங்கி உள்ளே வைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
