தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 'ஸெனட்' கூடாததால் பல்கலை பணிகள் பாதிப்பு; பட்டம் கிடைக்காமல் பறிபோகும் வேலை வாய்ப்பு

'ஸெனட்' கூடாததால் பல்கலை பணிகள் பாதிப்பு; பட்டம் கிடைக்காமல் பறிபோகும் வேலை வாய்ப்பு

'ஸெனட்' கூடாததால் பல்கலை பணிகள் பாதிப்பு; பட்டம் கிடைக்காமல் பறிபோகும் வேலை வாய்ப்பு


UPDATED : ஜன 19, 2026 10:42 AM

ADDED : ஜன 19, 2026 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2026 10:42 AM ADDED : ஜன 19, 2026 10:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை பல்கலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய 'ஸெனட்' கூட்டம், ஒன்பது மாதங்களாகியும் நடத்தப்படாததால், பல்கலையின் முக்கிய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். படிப்பை நிறைவு செய்தும் பட்ட சான்று கிடைக்காததால், மாணவர்கள் உயர்கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் மூத்த பல்கலையான சென்னை பல்கலையில் துணைவேந்தர் நியமிக்கப்படாததால், பல்வேறு சீர்கேடுகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாத சூழல் உள்ளது. அதில் மிக முக்கியமானது, பல்கலையின் மேலவையான 'ஸெனட்' கூட்டத்தை, ஆண்டுக்கு இரு முறை கூட்ட வேண்டும் என்பது விதி.

அதன்படி, கடந்த செப்டம்பரில் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்பது மாதங்களாக இன்னும் கூட்டப்படவில்லை. அதேபோல், ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, எந்த விதிகளையும் பின்பற்றாமல், கடமைக்காக சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால், முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாமல் பல்கலை தடுமாறுகிறது.

உரிய சான்றிதழ்

இதுகுறித்து, பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:

பல்கலையில் பாடத்திட்ட உருவாக்கம், ஆராய்ச்சி சார்ந்த அறிவுரைகள், உறுப்புக் கல்லுாரிகளுக்கான சட்ட திட்டங்கள் மற்றும் செயல் திட்டங்கள், தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகளை, ஸெனட் கூட்டத்தில் எடுக்க முடியும். அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுக்கும், அங்கே தான் ஒப்புதல் பெற முடியும்.

ஆனால், ஸெனட் கூட்டம் நடக்காததால், தேர்வுகளை நடத்துவது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு வழிகாட்ட முடியவில்லை. மேலும், தேர்வு முடிந்ததும், முக்கால்வாசி பேருக்கு உரிய சான்றிதழ்களை வழங்க முடியவில்லை. இதனால், பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்த பின்பும், பணிக்கு செல்லவோ, வெளிநாடுகளுக்குச் செல்லவோ முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். முக்கியமாக, ஸெனட் உறுப்பினர்களில் பலர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவில்லை. அதனாலும், ஸெனட் குழு முடங்கியுள்ளது.

பல்கலைக்கான துணைவேந்தர் நியமிக்கப்படாததால், துணைவேந்தர் வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு விஷயத்துக்குமான அனுமதியை பெற, அந்த குழுவில் உள்ள மூன்று துறை சார்ந்த அதிகாரிகளின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.

மூன்று இடங்களுக்குள்ளேயே கோப்புகள் சுற்றுவதால், முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது. முக்கியமாக மத்திய அரசிடம் நிதி பெறுவதற்கான எந்த முயற்சியையும் பல்கலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், ஸெனட் கூட்டத்தை கூட்டினால், இதுபோன்ற பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும் என்பதால், கூட்டத்தை நடத்த பல்கலை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.

அறிவுறுத்தல்


இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கை தயாரிப்பு பணிக்காக, ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்ட முக்கிய சாதனைகளை அனுப்பும்படி, பதிவாளர் கோரியுள்ளார். இதில், ஏற்கனவே வாசிக்கப்பட்ட கடந்தாண்டுக்கான ஆண்டறிக்கையும் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதாவது, இந்தாண்டு எந்த சாதனையும் புரியாததால், கவர்னர் முன் அறிக்கை வாசிக்கும்போது, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே வாசித்த அறிக்கையையும் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

அதேபோல், மத்திய அரசு செயல்படுத்தும் முன்னோட்ட திட்டமான, 'விக்சித் பாரத்' எனும், 'வளர்ந்த பாரதம்' திட்டத்தில், துறைகளின் பங்களிப்பு பற்றியும் கருத்துகளை கேட்டுள்ளார். அதேபோல், மத்திய அரசு நடத்திய பல்கலைகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் சாதனைகளையும் சேர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அதாவது, பட்டமளிப்பு விழாவில், பல்கலையின் வேந்தரான கவர்னர் பங்கேற்பார் என்பதால், அவர் விமர்சிக்க முடியாத வகையில், மத்திய அரசின் திட்டங்களையும் ஏற்று, பல்கலை செயல்படுகிறது என்பதற்காக, இவ்வாறு பதிவாளர் கேட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us