10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கருணாநிதி வாழ்க்கை வரலாறு
10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கருணாநிதி வாழ்க்கை வரலாறு
UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 07:46 AM
சென்னை:
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று பாடம், புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 1ல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது. அதையொட்டி, பல்வேறு வகுப்புகளின் பாடங்கள் திருத்தம் செய்யப்பட்டு, புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகத்தில், 10ம் வகுப்பில் தமிழ் பாடத்தில், கலை என்ற பிரிவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம், 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில் இடம் பெற்று உள்ளது.
மொத்தம் ஐந்து பக்கங்கள் நிறைந்த இந்த பாடத்தில், கருணாநிதியின் பெற்றோர் பெயர், அவரது பிறந்த நாள், பள்ளிப் படிப்பு, இலக்கியப் பணி, அரசியல் நிகழ்வுகள் என, 11 பிரிவுகளில், அவரது செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இறுதியாக, அவர் மறைந்த நாள் குறிப்பிடப்பட்டு, மு.க., என, அவரது கையெழுத்தும், கருணாநிதியின் படமும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, 9ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், கருணாநிதி குறித்த சிறிய பகுதி இடம்பெற்றுள்ளது. அதில், அவரது இலக்கிய பணிகள் குறித்த அம்சங்கள் உள்ளன.
கடந்த, 2011ல் அறிமுகமான, சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில், கருணாநிதி குறித்தும், தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்தும் பாடங்கள் இடம் பெற்றிருந்ததை, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அப்பகுதிகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டு நீக்கப்பட்டன.

