10 ஆண்டு ஆட்சியில் 22,000 வகுப்பறை; முதல்வர் ஆதிஷி பெருமிதம்
10 ஆண்டு ஆட்சியில் 22,000 வகுப்பறை; முதல்வர் ஆதிஷி பெருமிதம்
UPDATED : அக் 30, 2024 12:00 AM
ADDED : அக் 30, 2024 12:57 PM
புதுடில்லி:
ஆம் ஆத்மியின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் டில்லியில் 22,400 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என முதல்வர் ஆதிஷி பேசினார்.
கிழக்கு டில்லி மண்ட்வாலி சர்வோதயா அரசுப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை, முதல்வர் ஆதிஷி சிங், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
ஆதிஷி சிங் பேசியதாவது:
தனியார் பள்ளிகளை விட இந்தப் புதிய கட்டடம் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடத்தில் 64 அறைகள் உள்ளன. அதில் ஒன்பது ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டில்லியில் அரசுப் பள்ளிகள் இப்படி இல்லை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2015ம் ஆண்டு வரை டில்லி அரசுப் பள்ளிகளில் 24,000 வகுப்பறைகள் கட்டப்பட்டு இருந்தன. ஆனால், ஆம் ஆத்மியின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மட்டும் 22,400 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கல்வியின் தரம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மணீஷ் சிசோடியா பேசியதாவது:
இன்று எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். துணை முதல்வராக கல்வித் துறையையும் கவனித்து வந்த காலத்தில், நான் இந்தப் பள்ளிக்கு வரும்போதெல்லாம், சிதிலம் அடைந்த பள்ளிக் கட்டடத்தைப் பார்த்து வருத்தம் அடைவேன். அழும் பள்ளி கட்டடத்தால் சிரிக்கும் நாட்டை உருவாக்க முடியாது. நாடு வளமாக இருக்க வேண்டுமானால் பள்ளியில் கட்டடத்தையும் கல்வி கற்பித்தலையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும்.
ஆம் ஆத்மியின் கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த ஏராளமானோர் பொறியாளர்களாகவும், டாக்டர்களாகவும் உருவாகியுள்ளனர். அதேபோல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகவும் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். இதுதான் ஆம் ஆத்மி அரசின் சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.
திறப்பு விழா நிகழ்ச்சிக்குப் பின், பள்ளி மாணவர்களுடன் ஆதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் உரையாடினர்.