UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:38 AM

சிவகங்கை :
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் ரூ.10 கோடியில் குளிரூட்டப்பட்ட கூட்ட அரங்கு கட்டுவதற்கான திட்டம் தயாரித்துள்ளனர். இங்கு 2012ல் அரசு மருத்துவ கல்லுாரி துவக்கப்பட்டது.
ஆண்டுதோறும் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., முடித்து செல்கின்றனர். இந்த ஆண்டு வரை 700 மாணவர்கள் பட்டம் முடித்து சென்றுள்ளனர். இக்கல்லுாரியில் நவீன குளிரூட்டப்பட்ட கூட்ட அரங்கு கட்ட வேண்டும் என தொடர்ந்து மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து தரைத்தளத்தில் 750, முதல் தளத்தில் 250 பேர் என 1,000 பேரும் அமரும் விதத்தில் குளிரூட்டப்பட்ட நவீன கூட்ட அரங்கு கட்டப்பட உள்ளது.இங்கு மாணவர்களின் வசதிக்கென டிஜிட்டல் திரைகள், கருத்தரங்கு நடத்துவதற்கான அனைத்து வசதியுடன் கூடிய அரங்கு கட்ட திட்டமிட்டுள்ளனர்.
அரசுக்கு திட்ட அறிக்கை
பொதுப்பணித்துறை (மருத்துவ கட்டுமானம்) அதிகாரி கூறியதாவது: இங்கு ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரித்து கலெக்டர், டீன் மூலம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும், குளிரூட்டப்பட்ட அரங்கு கட்டும் பணி நடைபெறும், என்றார்.