UPDATED : ஜன 29, 2026 09:39 AM
ADDED : ஜன 29, 2026 09:41 AM

புதுடில்லி:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு படையெடுத்து செல்கின்றன.
திறமை வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவது அதிகரித்துள்ளதாக கூறப்படும் அதே வேளையில், இங்கிருந்து அமெரிக்கா செல்லும் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எளிதில் வாடிக்கையாளர்களை அணுகும் வசதி, விரைவாக முதலீட்டு நிதி கிடைக்கும் சூழல், முதிர்ச்சியான ஏ.ஐ., சூழல் ஆகியவை இருப்பதால், இந்நிறுவனங்கள் அமெரிக்காவின் பக்கம் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட ஏ.ஐ., ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
வணிகத்தேவையின் பொருட்டே இவ்வாறு செய்ய வேண்டியிருப்பதாக இந்நிறுவனங்களின் நிறுவனர்களும் முதலீட்டாளர்களும் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் இருப்பது இன்னொரு முக்கிய காரணம்.
பெரும்பாலான நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தலைநகராக கருதப்படும் சான் பிரான்சிஸ்கோவுக்கு இடம்பெயர்கின்றன. அங்கு ஏ.ஐ., ஆய்வாளர்கள், துணிகர முதலீட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன.
ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்காக செலவிட அமெரிக்க நிறுவனங்கள் தயாராக இருப்பதும் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அந்நாடு செல்ல முக்கிய காரணம்.
'அனைத்தும் போய்விடவில்லை'
'டை - சென்னை' அமைப்பின் தலைவர், முருகவேல் ஜானகிராமன்:
அமெரிக்காவில் 'சாஸ்' எனும் மென்பொருள் சேவை நிறுவனங்களின் தலைமையகங்கள் அதிகம். எனவே, ஏ.ஐ., நிறுவனங்கள் அவர்களை வாடிக்கையாளர்களாக பெறுவது எளிது. மேலும், முதலீட்டை பெறுவது, முதிர்ச்சியான சந்தையில் இயங்குவது எளிதாக இருப்பதால் நம் நிறுவனங்களில் பல அங்கு செல்கின்றன. அதே நேரத்தில், நம் நாட்டு ஏ.ஐ., ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முழுக்க முழுக்க அமெரிக்கா சென்றுவிடவில்லை.
'ஸ்டார்ட்அப்' வரையறை விரிவுபடுத்த அரசு திட்டம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரையறையை விரிவுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் ஸ்டார்ட் அப் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 'டீப் டெக்' எனும் ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை இந்த வரையறைக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் கீழ், தற்போது, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் ஸ்டார்ட் அப்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்போதுள்ள விதிமுறைகளின் படி, ஒரு நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகளுக்கு மிகாமலும், அதன் மொத்த வர்த்தகம் 100 கோடி ரூபாய்க்கு குறைவாகவும் இருந்தால் மட்டுமே, அது ஸ்டார்ப் அப் ஆக அங்கீகரிக்கப்படுகிறது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் மற்றும் பயோடெக் போன்ற டீப் - டெக் நிறுவனங்கள் லாபம் ஈட்ட நீண்ட காலமாகும் என்பதால், அவற்றுக்கு தேவையான நீண்ட கால முதலீடு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேபோல, கூட்டுறவு சங்கங்களும், பாரம்பரிய கட்டுப்பாடுகளால் சந்தையில் போட்டியிட முடியாமல் உள்ளன.
இந்த விரிவாக்கத்தின் வாயிலாக, ஏற்கனவே உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் டீப் - டெக் துறைக்கு மாற அனுமதிக்கப்படும். டீப் - டெக் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசின் நிதியுதவி தொகுப்பு மற்றும் கடன் உத்தரவாத திட்டங்கள் எளிதாக கிடைக்கும்.

