UPDATED : ஜன 29, 2026 09:41 AM
ADDED : ஜன 29, 2026 09:42 AM
சென்னை:
தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கமான நிசவ் - யு.கே., மற்றும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், 'இந்திய உலகளாவிய கல்வி உச்சி மாநாடு' துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது.
தமிழகத்தை உலகளாவிய கல்வி மற்றும் அறிவுசார் மையமாக மாற்றும் நோக்கில், இரண்டு நாள் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டின் நிறைவு விழாவை ஒட்டி, ஸ்ரீபெரும்புதுார் அருகே, 'அறிவுசார் நகரம்' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இந்த நகரில், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களின் கிளைகளை நிறுவ, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மாநாட்டில் ஆஸ்திரியா, ஜப்பான் உட்பட, 20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள், பல்கலைகள், முதலீட்டாளர்கள் உட்பட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.
கல்வியில் நவீன தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் புதுமை உள்ளிட்ட தலைப்புகளில், அவர்கள் விவாதிக்க உள்ளனர்.
மாநாட்டை துவக்கி வைத்து, தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “கல்வி எப்போதும் அரசியலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அறிவுசார் நகரம் திட்டத்தின் வாயிலாக, தென் கிழக்கு ஆசியாவின் கல்வித் துறை தலைநகரமாக, தமிழகம் மாறும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 6 சதவீதம் மட்டும் உள்ள தமிழகம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9 சதவீதம் பங்களிப்பதற்கு காரணம், உயர் கல்வியில் சிறந்து விளங்குவது தான்,” என்றார்.

