10 ஆண்டுகளில் 100 சதவீதம் உயர்ந்த மாணவர்கள் சேர்க்கை
10 ஆண்டுகளில் 100 சதவீதம் உயர்ந்த மாணவர்கள் சேர்க்கை
UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:12 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. திருப்புட்குழி கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்பாக துவக்கப்பட்ட இப்பள்ளிக்கு, கிராம மக்களிடையே 10 ஆண்டுகளாகவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பள்ளியின் நவீன கல்வி முறையும், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து அதிகப்படுத்தியது. திருப்புட்குழி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பாலுச்செட்டிச்சத்திரம், சிறுணை என பல கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகளை, இப்பள்ளியில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.
இப்பள்ளியில், டிஜிட்டல் மயமான கல்வி முறை காரணமாக, தனியார் பள்ளியிலிருந்து தங்களது பிள்ளைகளை விலக்கி, திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பல பெற்றோர் சேர்த்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு 172 மாணவ - மாணவியர் படித்த நிலையில், அடுத்து வந்த ஆண்டுகளில், 206, 245, 300, 416, 440 வரை மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில், 200 மாணவர்களின் எண்ணிக்கையை இப்பள்ளி உயர்த்தி காட்டியிருப்பது கல்வித் துறை அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 94 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 வகுப்பறைகள் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டன.
தமிழ், ஆங்கிலம் என இருவழி கல்வி முறையும் இப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.