1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம்; 7 நாளாக நடந்த போராட்டம் நிறுத்தம்
1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம்; 7 நாளாக நடந்த போராட்டம் நிறுத்தம்
UPDATED : டிச 25, 2025 10:10 PM
ADDED : டிச 25, 2025 10:11 PM
சென்னை:
ஏழாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த வாக்குறுதியை ஏற்று, போராட்டத்தை செவிலியர்கள் கைவிட்டனர்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொகுப்பூதிய செவிலியர்கள், க டந்த 18ம் தேதி முதல், சென்னை மற்றும் கூடுவாஞ்சேரியில், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் பேச்சு அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 50 செவிலியர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர். அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரிடம், அரசு தரப்பில் நேற்று மீண்டும் பேச்சு நடந்தது; இதில் தீர்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வருவோரை, நிரந்தர பணியிடத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 1,000 ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தரமாக நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், 4,825 பேர், ஏற்கனவே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை - 2 இடத்திற்கு, 1,998 பேர்; செவிலியர் கண்காணிப்பாளர் நிலை - 1க்கு 465 பேர்; செவிலியர் போதகர் நிலை - 2 பணியிடத்திற்கு 62 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
அரசாணை மேலும், ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க, விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது. அத்துடன், கொரோனா காலத்தில் பணியாற்றிய, 724 செவிலியர்கள், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசுடனான பேச்சுக்கு பின், போராட்டத்தை ஒத்திவைப்பதாக, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் செயலர் சுபின் கூறுகையில், ''கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த போராட்டத்தில், சங்கத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. எனவே, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.

