1,000 முதல்வர் மருந்தகம் 24ல் திறப்பு: அமைச்சர் பெரியகருப்பன்
1,000 முதல்வர் மருந்தகம் 24ல் திறப்பு: அமைச்சர் பெரியகருப்பன்
UPDATED : பிப் 18, 2025 12:00 AM
ADDED : பிப் 18, 2025 09:48 AM

சென்னை:
தமிழகம் முழுதும், 1,000 முதல்வர் மருந்தகங்களை, வரும், 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதில், 500 கூட்டுறவு சங்கங்களாலும், 500 புதிய தொழில் முனைவோராலும் நடத்தப்பட உள்ளன என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
தமிழக அரசின், முதல்வர் மருந்தகம் திறப்பு விழா குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் பெரியகருப்பன், துறை செயலர் சத்யபிராத சாஹு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் மற்றும் மண்டல இணை பதிவாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பிறகு, அமைச்சர் அளித்த பேட்டி:
கூட்டுறவுத்துறை சார்பில், ஏற்கனவே, 380 மருந்தகங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
ஏழை, நடுத்தர மக்கள், குறிப்பாக கிராம மக்களுக்கு, அதிக பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை, 980 முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான சான்றுகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. மற்றவற்றுக்கும் விரைவில் பெறப்படும்.
இத்திட்டத்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு குறைந்த விலையில், தரமான மருந்துகள் கிடைக்கும். மருந்தகம் துவக்க, அரசு சார்பில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
முதல்வர் ஸ்டாலின், வரும் 24ம் தேதி, தமிழகம் முழுதும் முதல்வர் மருந்தகங்களை துவக்கி வைக்க உள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கு, மருந்து கொள்முதல் செய்து தரும் நிறுவனம், மருந்துகளை வாங்கி வழங்கும்.
தனியார், பிரதமர் என, எந்த மருந்தகத்திலும் இல்லாத அளவிற்கு, முதல்வர் மருந்தகத்தில், குறைந்த விலையில், தரமான மருந்துகள் விற்கப்படும்.
மதுரை மாவட்டத்தில் அதிக அளவாக, 52; கடலுாரில், 49; கோவையில், 42; தஞ்சையில், 40; சென்னையில், 37 என, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைக்கு ஏற்ப மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன.
கேரளாவுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து, அம்மாநிலத்தில் இருப்பது போல, தமிழகத்தில் கூட்டுறவு மருத்துவமனையை செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். கூட்டுறவு துறையில் இதுவரை, 12,500 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.