UPDATED : பிப் 18, 2025 12:00 AM
ADDED : பிப் 18, 2025 09:52 AM

வாரணாசி:
கங்கை நதிக்கரையில், கண்காட்சி, கலை நிகழ்ச்சி, உரையாடல் என, வரும் 24ம் தேதி வரை நடக்கும் தமிழ் காசி சங்கமத்தை, 2.50 லட்சம் உள்ளூர் மக்கள் பார்வையிட உள்ளனர் என வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் கூறினார்.
முக்கிய நிகழ்வு
உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசி கங்கை நதிக்கரையில் நடக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து, வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம் கூறியதாவது:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியால் தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள கலாசார பகிர்வு அதிகரிக்கும்.
தமிழக மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுடன், இங்கு அதே துறைகளில் உள்ளவர்களை கலந்துரையாட வைத்தது, இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. கும்பமேளா நேரத்தில் நடப்பதால், அதிக தமிழர்கள் இந்நிகழ்ச்சியை காண முடியும்.
கங்கை நதிக்கரையில், கண்காட்சி, கலை நிகழ்ச்சி, உரையாடல் என்று, வரும் 24ம் தேதி வரை நடக்கும் தமிழ் காசி சங்கமத்தை, 2.50 லட்சம் உள்ளூர் மக்கள் பார்வையிடுகின்றனர். காசிக்கும், தமிழுக்குமான தொடர்பு அடையாளங்களை அறிந்து கொள்வர்.
காசியில், எட்டு தலைமுறைகளுக்கு மேலாக, தமிழர்கள் வசித்து வருவதால், அவர்கள் கடந்து வந்த பாதை, தற்போதைய வாழ்வியல் குறித்துதெரிந்துகொள்ள உதவும். இரு மாநில பாரம்பரியத்தை, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல, இச்சந்திப்பு பேருதவியாக இருக்கும்.
கும்பமேளாவுக்கு வந்ததில் ஒரு பகுதியினர் காசிக்கு வருகின்றனர். ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக பக்தர்கள் வருகின்றனர். இதனால், அனைத்து வசதிகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து வருகிறோம். குறிப்பாக, வாகன நெரிசல் ஏற்படாத வகையில், அதிக கவனம் செலுத்துகிறோம்.
காசி விஸ்வநாதர் கோவிலில், பூஜை நேரத்தில் சிறிய மாற்றம் செய்து, பக்தர்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைத்துள்ளோம். போக்குவரத்து நெரிசலால், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது.
புனித நகரம்
வி.ஐ.பி.,க்களுக்கான சிறப்பு வசதிகளை நிறுத்தியதால், சாதாரண பக்தர்களுக்கான வசதிகளை எளிதாக செய்து கொடுக்க முடிந்தது. காசி விஸ்வநாதர் கோவிலில் தேவாரம் ஓத, தமிழகத்திலிருந்து ஓதுவார் முன்வந்தால் அனுமதி வழங்கப்படும்.
வாரணாசி புனித நகரமாக இருப்பதால், மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் சாத்தியம் குறைவு. இதனால், 645 கோடி ரூபாயில், ரோப்வே கார் திட்டம் விரைவில் வரவுள்ளது. 'நமாமி' கங்கை எனும் நதிநீர் சுத்திகரிப்பு திட்டம் முழுவீச்சில் நடந்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தும், திறமையான தமிழ் அதிகாரிகளுக்கு, உத்தர பிரதேசம் மாநிலத்தில் தனி மரியாதை உண்டு. இன்றைய இளைஞர்கள், பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பை மூலதனமாக வைத்திருந்தால் பெரிதும் சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

