மத்திய பல்கலை.,யில் படிக்க சி.யூ.இ.டி.,தேர்வு மாணவர்கள் 1,049 பேர் பங்கேற்பு
மத்திய பல்கலை.,யில் படிக்க சி.யூ.இ.டி.,தேர்வு மாணவர்கள் 1,049 பேர் பங்கேற்பு
UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 10:47 AM

அவிநாசி:
பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் சி.யூ.இ.டி., தேர்வு எனப்படும் மத்திய பல்கலையில் பயில, பொது நுழைவுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது.
இது குறித்து, தேசிய தேர்வு முகமையின், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கே.எம்.சி., பள்ளியின் தலைமை முதல்வருமான மனோகரன் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரேயொரு தேர்வு மையமாக கே.எம்.சி., பள்ளியை தேசிய தேர்வு முகமை அறிவித்து, சி.யூ.இ.டி.,தேர்வுகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து நீட் தேர்வுகளுக்கான சிறந்த ஒருங்கிணைப்பு செயல்பாடுகளால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த, 15ல் துவங்கிய இத்தேர்வு 18ம் தேதி வரை நடைபெறும். 1,049 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பாடத்திட்ட வாரியாக கணக்கு, வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், கணக்கியல், பொது தேர்வு ஆகியவற்றுக்கு தேர்வு நேரமாக 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குறைந்தபட்சமாக 50 மதிப்பெண்கள் பெற வேண்டும். மொழிப் பிரிவு பாடத்திட்டத்தில் உயிரியல், ஆங்கிலம், ஹிந்தி, புவியியல், உடற்கல்வி, வணிக ஆய்வுகள், அரசியல் ஆய்வுகள் ஆகியவற்றுக்கு 45 நிமிடங்களாக தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில், நாளொன்றுக்கு இரண்டு பிரிவுகளாக நான்கு தேர்வுகள் வீதம் நடக்கிறது. இந்தியாவில் உள்ள, 45 மத்திய பல்கலையிலும், அதனுடன் இணைக்கப்பட்ட மத்திய மேலாண்மை கல்லுாரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இது.
தமிழகத்தில் திருவாரூரிலும், கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதியிலும், ஆந்திராவில் ஹைதராபாத்திலும் நேரடி மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் 26 தேர்வு மையங்கள் தேசிய தேர்வு முகமையின் தேர்வு மையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில், 13 லட்சத்து, 48 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.