10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு
10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு
UPDATED : அக் 15, 2024 12:00 AM
ADDED : அக் 15, 2024 10:34 PM
கோவை:
தமிழகத்தில் 2024 - 25ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை, கோவை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, பிளஸ் 2 பொதுத் தேர்வு அடுத்தாண்டு மார்ச் 3 முதல் 25ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 5 முதல் 27ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச் 28 முதல் ஏப்., 15ம் தேதி வரையும் நடக்கின்றன. தேர்வுகள் காலை 10:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:15 மணிக்கு முடிவடைகின்றன.
முன்னதாக செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்புக்கு பிப்., 7 முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்., 15 முதல் 21ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு பிப்., 22 முதல் 28ம் தேதி வரையும் நடக்கின்றன.
தேர்வு முடிவுகள் பிளஸ் 2 வகுப்புக்கு மே 9ம் தேதியும், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு மே 19ம் தேதியும் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளன.
நிருபர்களிடம் அமைச்சர் மகேஷ் கூறியதாவது:
பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக அரசு, 44,042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவர்கள் திட்டமிட்டு படித்து, பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட, 32,298 பேருக்கு சம்பளம் வர வேண்டியுள்ளது.
மத்திய அரசு இன்னும் நிதி வழங்காததால், தமிழக அரசு நிதியில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை, எவ்வித காரணமும் இல்லாமல் நிறுத்திவிடக்கூடாது என வலியுறுத்தி வருகிறோம்.
சிறப்பு குழந்தைகள், கலை, பண்பாடு, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் என பள்ளிகள் சார்ந்து, 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் மத்திய அரசும், தமிழக அரசும் நிதியை பகிர்ந்து செலவிட்டு வருகின்றன. இப்படியிருக்க, அந்த நிதியில் மத்திய அரசு கைவைக்கிறது. மத்திய அரசு கூறும் கட்டமைப்பு உட்பட 20 வகையான கூறுகளில், 18 வகைகளில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது.
சம்பந்தமே இல்லாமல் மும்மொழி உள்ளிட்ட கொள்கைகளை சேர்த்துக் கொண்டால் மட்டுமே, நிதி தருவோம் என்பதில் நியாயம் இல்லை. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.