அன்னியூர் அரசு கல்லுாரியில் 11,948 விண்ணப்பங்கள் குவிந்தது: கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
அன்னியூர் அரசு கல்லுாரியில் 11,948 விண்ணப்பங்கள் குவிந்தது: கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM
ADDED : ஜூன் 03, 2025 10:01 AM
விழுப்புரம்:
கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்த விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புதியதாக பல அரசு கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், ஒரே ஒரு அரசு கல்லுாரியாக அண்ணா அரசு கலைக்கல்லுாரி மட்டுமே இயங்கியது.
மாணவர்களின் நலன் கருதி திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி, எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருவெண்ணெய்நல்லுார் அரசு கலைக்கல்லுாரி, செஞ்சி அரசு கலைக்கல்லுாரி, வானுார் அரசு கலைக்கல்லுாரி அடுத்தடுத்து துவங்கப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விக்கிரவாண்டி தொகுதியில் புதிய அரசு கல்லுாரி துவங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இக்கல்லுாரிக்கான இடம் தேர்வு செய்யும் பணியில் தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். அன்னியூர் தேர்வு செய்து அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக கட்டடத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தற்காலிகமாக தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இக்கல்லுாரியில், ஆங்கில வழியில் பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்.சி., கணினி அறிவியல் பிரிவுகளும், தமிழ் வழியில் பி.ஏ., அரசியல் அறிவியல், பி.எஸ்.சி., வேதியியல் ஆகிய 5 பிரிவுகள் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. இதில், அறிவியல் பாட பிரிவுகளுக்கு தலா 50 மாணவர்களும், கலைப் பாட பிரிவுகளுக்கு தலா 60 மாணவர்கள் என மொத்தம் 280 மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இக்கல்லுாரியில் சேர்வதற்கு11,948 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், பி.காம்., பாடத்திற்கு 1904, பி.பி.ஏ., 2530, அரசியல் அறிவியல் 1977, கணினி அறிவியல் 2742, வேதியியல் 2795 பேர் விண்ணப்பித்துள்ளனர். விளையாட்டு பிரிவில் 255 பேர், என்.சி.சி., பிரிவில் 64 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 51, மாஜி ராணுவ வீரர்கள் பிரிவு 2, செக்யூரிட்டி போர்ஸ் பிரிவில் 2 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அன்னியூர் பகுதி சுற்றியும் கிராமப்புறங்களை கொண்ட பகுதி. காணை ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் அன்னியூர், அனுமந்தபுரம், அரியலுார் திருக்கை, அதனுார், அத்தியூர் திருக்கை, ஏழுசெம்பொன், கஞ்சனுார், கெடார், கோழிப்பட்டு, மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு, மேல்காரணை, நல்லாப்பாளையம், சி.என்.,பாளையம், பனமலை, பெருங்கலாம்பூண்டி, போரூர், சாலவனுார், சங்கீதமங்கலம், செம்மேடு, சித்தேரி, சூரப்பட்டு, வெங்கமூர், வெங்கந்துார் உள்ளிட்ட கிராமங்கள் அன்னியூர் சுற்றுப்பகுதியில் உள்ளன.
அன்னியூருக்கு மற்றும் அன்னியூர் வழியாக அனந்தபுரம், புதுக்கருவாட்சிக்கு, விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன் பஸ், தனியார் பஸ் இயக்கப்படுகிறது. நல்லாப்பாளையம், கடையம், உடையாநத்தம், வெங்கந்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து அன்னியூருக்கு பஸ் போக்குவரத்து இல்லை.
பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராம மாணவர்கள் கல்லுாரிக்கு வந்து செல்வது சிரமம். சில தினங்களுக்கு முன் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அன்னியூருக்கு கல்லுாரி வேலை நேரத்தில் பஸ் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்தனர்.
எனவே, அன்னியூர் அரசு கல்லுாரிக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அரசு பஸ் போக்குவரத்து ஏற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் கல்லுாரி துவங்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது இயக்கப்படும் பஸ்களை கூடுதல் கிராமங்களை இணைத்தும், மற்ற கிராமங்களை அன்னியூரை இணைக்கும் வகையிலும் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.