அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு: முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்து தாராளம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு: முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்து தாராளம்
UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM
ADDED : ஜூன் 03, 2025 10:03 AM

புதுச்சேரி:
மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் நல கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்பட பல்வேறு தாராள அறிவிப்புகளுக்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் அளித்தார். அத்துடன் அங்கன்வாடி மையங்களின் நீண்ட கால வாடகை பிரச்னைகளும் தீர்க்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 36 ஆயிரம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின், மாநில திட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயகுமார், கலெக்டர் குலோத்துங்கன், சார்புச் செயலர் (நிதி) ரத்னகோஷ் கிஷோர் சவுரே, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் முத்துமீனா, குழு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டம் தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
தற்போது வழங்கப்பட்டு வரும் இணை உணவினை, மத்திய அமைச்சகத்தின் வழிக்காட்டுதலின்படி 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தினமும் முட்டை மற்றும் சிறுதானிய சுண்டல், மாதம் இருமுறை சத்துமாவு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகர்புற அங்கன்வாடி மையங்களுக்கு தற்போது வழங்கப்படும் வாடகை கட்டணம் ரூ.3250ல் இருந்து 6000 ரூபாயாகவும், கிராமப்புறங்களுக்கு ரூ.1750ல் இருந்து 2000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்குவது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை சிறுதானிய பிஸ்கட் மற்றும் பருவகால பழங்கள் வழங்குவது.
கவுரவ அங்கன்வாடி ஊழியர்களுக்கான ஊதியம் 6000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாகவும், உதவியாளர்களுக்கு 4000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாகவும், உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காய்கறி மற்றும் எரிவாயு தொகை உயர்த்தி வழங்குவது.
அங்கன்வாடி பயிற்சியாளர்களுக்கு கவுரவ ஊதியம் 10,000 ரூபாயில் இருந்து ரூ. 25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சுமை
ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்திற்கு தற்போது ஆண்டிற்கு ரூ.18 கோடியை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வாயிலாக அரசு செலவிட்டு வருகின்றது. இந்த தாராள அறிவிப்புகளால் கூடுதலாக ரூ. 12 கோடி செலவாகும் என்பது குறிப்பிடதக்கது.