UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM
ADDED : ஜூன் 03, 2025 10:05 AM

உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகள் சேர்க்கை நேற்று நடந்தது.
உடுமலையில் 138, குடிமங்கலத்தில் 75 மற்றும் மடத்துக்குளத்தில் 77 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. அங்கன்வாடி மையங்களில் இரண்டு முதல் ஐந்து வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு அந்தந்த பகுதி அங்கன்வாடி மையங்களிலிருந்து தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து உணவுபொருட்கள் வழங்குவதும் நடக்கிறது.
மேலும், குழந்தைகளுக்கு ஒரு வயது முதல் இரண்டு வயது வரை அவர்களுக்கான சத்துமாவு, முட்டை மையத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.
கல்வியாண்டு துவக்கம் என்றில்லாமல், இரண்டு வயது நிறைவுபெறும் குழந்தைகளை, அங்கன்வாடி பணியாளர்கள் மையங்களில் சேர்க்கை செய்து பராமரிக்கப்படுகின்றனர். இருப்பினும், புதிய கல்வியாண்டையொட்டி நேற்றும் அங்கன்வாடி மையங்களில் சேர்க்கை நடந்தது. குழந்தைகளுக்கு சிறிய பரிசு பொருட்கள், பலுான்கள், இனிப்புகள் வழங்கி அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை வரவேற்றனர்.