அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் உணவுப்படி உயர்வு
அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் உணவுப்படி உயர்வு
UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM
ADDED : ஜூன் 03, 2025 10:07 AM

பொள்ளாச்சி:
தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில், ஒவ்வொரு மாணவருக்கும் நாள் ஒன்றுக்கு உணவுக்காக, 250 ரூபாய் ஒதுக்கிய நிலையில், தற்போது, 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் மாநிலம் முழுதும், 28 இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
அசைவ உணவு
இங்கு, 7,8,9 மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இதன்படி, மாவட்ட, மாநில தேர்வு போட்டிகள் வாயிலாக மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மேலும், கவுன்சிலிங் வாயிலாக தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால் என விளையாட்டு அடிப்படையில், தங்கும் விடுதிகளில் இணைகின்றனர்.
இவர்களுக்கு, உணவு, விளையாட்டு உபகரணங்கள், சீருடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் அரசால் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதன்படி, ஒவ்வொரு மாணவருக்கும் இதுநாள் வரை, நாள் ஒன்றுக்கு, உணவுக்காக 250 ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில், தற்போது, 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும் அசைவ உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணா கூறியதாவது:
விளையாட்டு விடுதி களில் காலையில், 2 மணி நேரமும், மாலையில் இரண்டரை மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்கும் போது, உடல் ஆரோக்கியத்தை பேண, தினமும் சத்தான உணவுகளை சேர்ப்பது அவசியம்.
அரசு பணி
விளையாட்டு வீரர்களுக்கு உடல் வலு சேர்க்க இறைச்சி அவசியம். அதற்காக, வாரத்தில் மூன்று நாட்கள் மீன், மூன்று நாட்களில் கோழி இறைச்சி, ஒரு நாள் ஆடு அல்லது மாட்டிறைச்சி அளிக்கப்படும்.
மாநில, தேசிய, உலக அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவதன் வாயிலாக, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில், எளிதாக கல்லுாரியிலும் சேரலாம். அதேபோல, அரசு பணியும் எளிதாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

