மாவட்ட அளவிலான கலைத்திருவிழா துவக்கம் முதல் நாளில் 1,200 மாணவ, மாணவியர் பங்கேற்பு
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா துவக்கம் முதல் நாளில் 1,200 மாணவ, மாணவியர் பங்கேற்பு
UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 08:55 AM
கோவை:
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நேற்று துவங்கிய நிலையில் கிராமிய நடனம், பரதம் உள்ளிட்ட போட்டிகளில், 1,200 மாணவ, மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் நடனம், இசைக்கருவிகள் வாசித்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட கலை திறன்களை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.
பள்ளி, ஒன்றியம் அளவில் கலைத்திருவிழா போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று, சிங்காநல்லுார், கே.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் துவங்கியது. முதல் நாளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 1,200 பேர் பங்கேற்றனர்.
அதாவது, ஒன்று முதல் பிளஸ்2 வரையிலான மாணவர்களுக்கு, பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், கிராமிய நடனம், பரதம், வில்லுப்பாட்டு, மெல்லிசை தனிப்பாடல் என, 84 வகையான போட்டிகள் இடம்பெறுகின்றன.
இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐந்து போட்டிகளும், மூன்று முதல் ஆறாம் வகுப்பு வரை எட்டு போட்டிகளும், ஆறு முதல் எட்டு வரை, 11 போட்டிகளும், 9, 10 மற்றும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு தலா, 30 போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு போட்டியிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து முதல் பரிசு பெறும் மாணவர்கள் தலா ஒருவர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். நேற்று நடனம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினர்.
இன்று, 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் இடம் பெறுகின்றன. மாணவ, மாணவியரின் தனித்திறன் சார்ந்த போட்டிகள் பார்வையாளர்களிடம் கரகோஷத்தை எழுப்பியது.