UPDATED : நவ 15, 2024 12:00 AM
ADDED : நவ 15, 2024 08:57 AM
சென்னை:
சுற்றுச்சூழல் விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை, 13 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் பணியில் சிறப்பாக செயல்படும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில், சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவ்விருதுகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; சுற்றுச்சூழல் மேலாண்மை; சுற்றுச்சூழல் சிறப்பு ஆராய்ச்சி கட்டுரை போன்ற பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு முறையே, 15,000, 10,000, 7,500 ரூபாய்; சுற்றுச்சூழல் சிறப்பு ஆராய்ச்சி கட்டுரைகளில், சிறந்த கட்டுரைக்கு, 15,000 ரூபாய், பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
கடந்த, 2010 முதல் பரிசுத்தொகை உயர்த்தப்படவில்லை. எனவே, பரிசுத்தொகையை முறையே, 30,000, 20,000, 15,000; சிறப்பு ஆராய்ச்சி கட்டுரைக்கான பரிசுத்தொகை 30,000 ரூபாய் என, உயர்த்தி வழங்கும்படி, சுற்றுச்சூழல் இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதை பரிசீலனை செய்த அரசு, பரிசுத்தொகையை, 20,000, 15,000, 10,000 என்றும், ஆராய்ச்சி கட்டுரைக்கான பரிசுத்தொகையை, 20,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க, அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.