ரூ.13 கோடியில் டி.ஆர்.டி.ஓ., மெகா ஆராய்ச்சிக் கூடம்
ரூ.13 கோடியில் டி.ஆர்.டி.ஓ., மெகா ஆராய்ச்சிக் கூடம்
UPDATED : அக் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்தியாவில் முதன் முறையாக பாரதியார் பல்கலையில் டி.ஆர்.டி.ஓ., உயிர் அறிவியல் மையம் 13 கோடி ரூபாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை 2006, ஜூன் 9ல், ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்தார்.
பாரதியார் பல்கலை வளாகத்தில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது உயிர் அறிவியல் மையம். இந்த மையத்தில் ஏழு கோடி ரூபாய்க்கு கருவிகள் வாங்கப்பட்டு, நிறுவும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, இந்த மையம் நவீன கருவிகளைக் கொண்டது என்ற பெயரைப் பெற்றுள்ளது. இம்மையத்தில், தமிழகத்தில் கலை அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த மையத்தில், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் உயிர் தொழில்நுட்பம், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பம், இயற்பியல், மரபியல் பொறியியல் உட்பட பல்வேறு முக்கிய துறைகளில் மட்டும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
பனிமலையில் தக்காளி செடி வளர்ப்பு:
தற்போது பாரதியார் பல்கலையில் டி.ஆர்.டி.ஓ.,வுக்காக நடந்து வரும் பல்வேறு ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குறிப்பாக பனிமலையில் தக்காளி செடி வளர்ப்பது பற்றிய ஆராய்ச்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பனிமலைப் பிரதேசங்களில் (ஜம்மு, காஷ்மீர்), ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பனிக்கட்டி அதிகம் இருக்கும். மூன்று மாதங்கள் மலைப்பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய சாதக சூழ்நிலை அமைந்திருக்கும். இந்த மாதங்களில், பனிமலையில் தக்காளி பயிரிட்டு, விளைச்சல் பெறுவது பற்றிய ஆய்வு பாரதியார் பல்கலையில் நடந்து வருகிறது.
உயிர் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கிரிஜா, சதீஷ்குமார் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைப் போல 10க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிர் அறிவியல் மையம் டிசம்பரில் திறப்பு
கோவை பாரதியார் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிர் அறிவியல் மையத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், டிச., முதல்வாரத்தில் திறந்து வைக்கிறார்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
எம்.பில்., பி.எச்டி., பட்டத்தை மட்டும் கொடுப்பதோடு நின்று விடாமல், நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கு, தொழிற் கூடங்களுக்கு தேவைப்படும் பொருட்களை மிகக்குறைந்த செலவில் அளிப்பதற்கான கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதே ஒரு கல்வி நிறுவனத்தின் முக்கிய பணியாக இருக்க முடியும்.
பாரதியார் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.டி.ஓ., - பாரதியார் பல்கலை உயிர் அறிவியல் மையம், டிச., முதல்வாரத்தில் திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மையத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
டி.ஆர்.டி.ஓ.,வுக்கு சொந்தமான 64 ஆராய்ச்சிக்கூடத்தோடு, உயிர் அறிவியல் மையம் தொடர்பில் இருக்கும். இங்கு கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நானோ டெக்னாலஜி துறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மையத்தில் அத்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மையத்தில் கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு பாரதி மற்றும் தேசிய தலைவர்களின் பெயர் சூட்டப்படும்.
இம்மையத்திற்கென, தனி வெப்சைட் உருவாக்கப்படவுள்ளது. இந்த மையத்தை நிர்வகிக்க, கர்னல் தகுதியில் உள்ள ராணுவ அதிகாரி நியமிக்கப்படுவார். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
