13 இன்ஜினியரிங் கல்லூரிகளில் இதுவரை ஒருவர் கூட சேரவில்லை!
13 இன்ஜினியரிங் கல்லூரிகளில் இதுவரை ஒருவர் கூட சேரவில்லை!
UPDATED : ஆக 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒரு சில இடங்கள் தவிர அனைத்து இடங்களும் பூர்த்தியாகிவிட்டன. இதேபோல பிரபலமான சுயநிதிக் கல்லூரிகளிலும் கணிசமான இடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தொடங்கியுள்ள நிலையில், பல புதிய கல்லூரிகளில் இடங்கள் மெதுவாக பூர்த்தியாகி வருகின்றன. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கருதி, புதிய கல்லூரிகளில் சேருவதற்கு பல மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இருந்தபோதிலும்கூட, தங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள சிறந்த கல்லூரிகளில் இடங்கள் பூர்த்தியாகிவிட்ட நிலையில், தவிர்க்க இயலாமல் புதிய கல்லூரிகளில் சேரும் நிலைக்கு பலர் ஆளாகின்றனர். விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைக்காத மாணவர்களும், புதிய கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் உள்ள இடங்களைத் தேர்வு செய்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் தமிழகத்தில் உள்ள 340 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் இன்னும் 44 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் பூர்த்தியாக வேண்டியுள்ளது.
பெரும்பாலான மாணவர்களின் முதல் விருப்பமாக உள்ள, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கை 18,264. அதில் ஜூலை 31ம் தேதி வரை 9503 பேர் சேர்ந்துள்ளனர். இப் பாடப்பிரிவில் 52.04 சதவீத இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரில் 17,115 இடங்களில் 6952 இடங்களும் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 11,837 இடங்களில் 4032 இடங்களும் பூர்த்தியாகியுள்ளன.
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் உள்ள 402 இடங்களில் 310 இடங்களும் (77 சதவீதம்) ஐ.டி. பாடப்பிரிவில் உள்ள 13,381 இடங்களில் 4549 இடங்களும் (34 சதவீதம்) நிரம்பியுள்ளன. சிவில் என்ஜினியரிங் பாடப்பிரிவில் 59.62 சதவீத இடங்கள் பூர்த்தியாகியுள்ளன. அதாவது சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 3281 இடங்களில் 1956 இடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
எலெக்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் பாடப்பிரிவில் 1671 இடங்களில் 939 இடங்கள் (56 சதவீதம்) பூர்த்தியாகியுள்ளன. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 8321 இடங்களில் 4351 இடங்கள் (52 சதவீதம்) பூர்த்தியாகியுள்ளன.
முதல் கட்ட கவுன்சிலிங்கில் 33,602 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 8 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்வில்லை. தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிலும் ஆப்சென்ட் ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆப்சென்ட் ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை இருந்தால், மூன்றாவது கட்ட கவுன்சிலிங்கை ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் முடித்து விடலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் நம்புகின்றனர். அத்துடன், மூன்றாவது கட்ட கவுன்சிலிங்க் முடிவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.