UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 10:21 AM

கோவை:
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உரிய தகுதிகள் இருந்தும் விடுபட்ட, மாணவர்களின் பட்டியல் பள்ளி மற்றும் உயர்கல்வித்துறையுடன் இணைந்து மாவட்ட சமூகநலத்துறையால் திரட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ்2 வரை படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், அரசு உதவிபெறும் கல்லுாரி மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளில், 15, 677 மாணவிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற்றுள்ளனர். பலருக்கு விழிப்புணர்வு இருப்பினும், தகுதியுள்ள சிலர் இதில் விண்ணப்பிக்காமல் விடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட சமூகநலத்துறை சார்பில், அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில், முதலாமாண்டு மாணவிகளின் விபரங்களை சேர்க்கையின் போதே பெற்று, இத்திட்டத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அம்பிகா கூறுகையில் புதுமைப்பெண் திட்டத்தில், 15, 677 மாணவிகள் மூன்றாண்டுகளில் பயன்பெற்றுள்ளனர். தகுதி இருந்தும் விண்ணப்பிக்காத மாணவிகள், 258 பேரை கண்டறிந்துள்ளோம்; தொடர்ந்துவிபரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகள், 274 பேர் இத்திட்டத்தில் தகுதி பெறுகின்றனர். அனைத்து நோடல் அதிகாரிகளுக்கும் திட்டத்தை, முறையாக செயல்படுத்த இரண்டு முறை கூட்டம் நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கலெக்டர் தலைமையில், விரைவில் கூட்டம் நடக்கவுள்ளது என்றார்.