ஒரே நாளில் 2 தேர்வுகள் விவகாரம்: அறிக்கைக்கு பின் அரசு சுறுசுறுப்பு
ஒரே நாளில் 2 தேர்வுகள் விவகாரம்: அறிக்கைக்கு பின் அரசு சுறுசுறுப்பு
UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 09:47 PM
சென்னை:
பொறியியல் சார்ந்த இரண்டு பணிகளுக்கு, ஒரே நாளில் போட்டித்தேர்வு நடத்துவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறையின் நேர்முக தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள், மாற்று தேதியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், வரும் 14 முதல் 26 வரை நடக்கவுள்ளன.
அதில், சிவில் பொறியியல் பாடத்திற்கான தேர்வு நடக்கும் 21ல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு, 2,566 பொறியியல் சார்ந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வை, அண்ணா பல்கலை நடத்துகிறது.
பொறியியலை அடிப்படையாகக் கொண்ட ஒரே மாதிரியான பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி.,யும், அண்ணா பல்கலையும் தேர்வு நடத்துவதால், ஒரு தேர்வில் பங்கேற்க முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை பணிகளுக்கான நேர்முகத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால், வரும் 21ல் நடக்கவுள்ள நேர்முகத் தேர்வை மட்டும், வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நகராட்சி நிர்வாகத்தில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணியிடங்கள், துப்புரவு ஆய்வாளர் பணியிடங்கள், நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.
இதற்காக எழுத்து தேர்வு முடிந்து, தேர்ச்சி பெற்ற பட்டப்படிப்பு தகுதி நிலை பணியிடங்களுக்கு, நேற்று முதல் 18ம் தேதி வரையும், பட்டயப்படிப்பு தகுதி நிலை பணியிடங்களுக்கு, வரும் 21 முதல் நவ., 14 வரையும் நேர்முக தேர்வு நடக்க உள்ளது.
அதற்கான அழைப்பு கடிதம், https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு, 21ல் நடப்பதாக தெரிய வந்துள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நடத்தும் நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டிய நாளில், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் எழுத்து அல்லது நேர்முக தேர்தவில் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தால், அவர்களுக்காக மாற்று தேதியில் நேர்முக தேர்வு நடத்தப்பட உள்ளது.
எனவே, மாற்று தேதி வேண்டுவோர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பதிவு எண்ணுடன், பிற எழுத்து அல்லது நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதங்களை இணைத்து, dmamaws2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில், மாற்று தேதி கோரி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.