UPDATED : அக் 09, 2024 12:00 AM
ADDED : அக் 09, 2024 09:48 PM
சென்னை:
சென்னை அருகே அமைக்கப்படும் அறிவுசார் நகரம், தமிழக இளைஞர்களை உலகளாவிய வேலைக்கு தயார்படுத்தும் என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்து உள்ளார்.
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் உலகத் தரத்தில் பல்கலை, ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய அறிவுசார் நகரங்கள் உள்ளன. அதேபோன்ற நகரத்தை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில், தமிழக அரசின், டிட்கோ நிறுவனம், 1,700 ஏக்கரில் அமைக்க உள்ளது.
இதற்காக, 200 கோடி ரூபாய் செலவில் பசுமை உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. அங்கு கல்வி நிறுவனங்கள், வளர்ந்து வரும் துறைகளில் ஆய்வில் ஈடுபடும் நிறுவனங்கள் தொழில் துவங்கலாம்.
இந்நிலையில், தொழில் துறை அமைச்சர் ராஜா, அறிவுசார் நகர திட்ட பணிகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதில், துறை செயலர் அருண்ராய், டிட்கோ மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அமைச்சர் ராஜா கூறியுள்ளதாவது:
உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து, மாணவர்களுக்கு தமிழகத்திலேயே உலகளாவிய கல்வி வழங்கும் வாய்ப்பு இதன் வாயிலாக கிடைக்கும்.
தமிழக இளைஞர்களை உலகளாவிய வேலைகளுக்கு தயார்படுத்தும்; சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும். அறிவுசார் நகரத்தின் வாயிலாக, தமிழகம் அறிவு தலைமை என்ற நிலையை மீண்டும் உறுதிப்படுத்தும். இவ்வாறு கூறியுள்ளார்.