இன்ஜினியரிங் படிப்புகளில் இனி விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம்
இன்ஜினியரிங் படிப்புகளில் இனி விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம்
UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM
ADDED : ஜூலை 23, 2024 11:03 AM

சென்னை:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் விளையாட்டு வீரர்களுக்கு, வெறும் 500 இடங்கள் மட்டுமே ஒதுக்கி வந்த நிலையில், வரும் ஆண்டில் இருந்து 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக, அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான பி.இ., பி.டெக்., ஆன்லைன் கவுன்சிலிங்கை, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
முதற்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இந்த ஆண்டு, 433 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 79,938 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டை விட, 28,000 இடங்கள் அதிகம். விளையாட்டு பிரிவினருக்கு, மொத்தமாக, 500 இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை ஏற்று, வரும் கல்வி ஆண்டு முதல், மொத்த இடங்களில் 2 சதவீத இடங்கள், விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்படும்.
தமிழக பல்கலைகளில் துணை வேந்தர் பதவிகளை நிரப்ப, யு.ஜி.சி., உறுப்பினர் அல்லாத தேடல் குழு அமைக்கப்படும். கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம், அரசின் நிதிநிலையை பொறுத்து முடிவு செய்யப்படும். அரசு கல்லுாரிகளில், முதுநிலை மாணவர் சேர்க்கை விரைவில் அறிவிக்கப்படும். இன்ஜினியரிங் கல்லுாரிகளில் கடந்த ஆண்டின் கல்விக் கட்டணமே தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் அறிவிப்புப்படி, விளையாட்டு பிரிவினருக்கு 2 சதவீதம் அளிக்கப்பட்டால், வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் 3,600 இடங்கள், அதாவது நடப்பு ஆண்டை விட, 6 மடங்கு அதிகம் இடங்கள் கிடைக்கும்.
உயர் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் ஆபிரஹாம், அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் புருஷோத்தமன் உடனிருந்தனர்.
2.40 லட்சம் சீட்
* கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து, 9,645. மாணவர்கள் - 1 லட்சத்து 12,805; மாணவியர் - 87,197; மூன்றாம் பாலினத்தவர் - 3
*இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 433 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 2 லட்சத்து 40,091 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர். கவுன்சிலிங் வழியாக, ஒரு லட்சத்து 79,938 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்
*மொத்த பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை - 106; புதிய பாடப்பிரிவுகள் - 10
*அரசு பள்ளிகளுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு, 33,335 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் - 15,978; மாணவியர் - 17,355; மூன்றாம் பாலினத்தவர் - 2.

