ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்களா? ஐ.ஐ.டி., உதவியை நாடியது சுப்ரீம் கோர்ட்
ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்களா? ஐ.ஐ.டி., உதவியை நாடியது சுப்ரீம் கோர்ட்
UPDATED : ஜூலை 23, 2024 12:00 AM
ADDED : ஜூலை 23, 2024 11:02 AM

புதுடில்லி:
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருந்ததாக கூறப்படுவது குறித்து ஆராய்ந்து பதிலளிக்கும்படி, டில்லி ஐ.ஐ.டி.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள் லீக் ஆனது உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான, 40க்கும் மேற்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.
நான்கு வாய்ப்பு
நேற்று நடந்த விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில், ஒரு பிரச்னை முன்வைக்கப்பட்டது. அணு மற்றும் அதன் அமைப்புகள் தொடர்பான ஒரு கேள்விக்கு, நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அதில் ஒரு பதிலை தேர்வு செய்யும்படி கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்தக் கேள்விக்கு இரண்டு பதில்கள் சரியானதாக உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வில் சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும்.
அதே நேரத்தில், தவறான பதில் அளித்தால், ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். அதன்படி, இந்த குறிப்பிட்ட கேள்விக்கு இரண்டு சரியான பதில்களில் ஒன்றை தேர்வு செய்தவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அதற்கு பதில் அளிக்காதவர்களுக்கு, ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த குறிப்பிட்ட கேள்விக்கு சரியான பதில் என்ன என்பதை, பாடம் தொடர்பான மூன்று நிபுணர்கள் குழுவை அமைத்து, இன்று மதியத்துக்குள் தெரிவிக்கும்படி, டில்லி ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்துக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நிரூபிக்க முடியுமா?
முன்னதாக அமர்வு கூறியுள்ளதாவது:
நீட் தேர்வில், ஒரு சில தேர்வு மையங்களில் முறைகேடுகள், மோசடிகள், தவறுகள் நடந்துள்ளன. ஆனால், நாடு முழுதும் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா. இந்த தேர்வின் நடைமுறையில் குறை இருப்பதாக பொதுவாக கூற முடியாது.
தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை, மதிப்பெண் விபரங்களை முழுதும் வெளியிட்டுள்ளது. தேர்வு நடைமுறையில் மோசடி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை மனுதாரர்களால் தெரிவிக்க முடியுமா.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
கோர்ட்டில் என்.டி.ஏ., விளக்கம்
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின், அது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் பகுப்பாய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது. நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.இதற்கு மனுதாரர்கள் தரப்பில், அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து, தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய தேர்வு முகமையின் நிர்வாகக் குழுவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி இடம்பெற்றுள்ளார். ஆனால், நீட் தேர்வு தொடர்பான பெரும்பாலான விஷயங்களை, தேர்வு முகமையின் மேலாண்மை குழு தான் கையாளுகிறது.
தேர்வுக்கான பட்ஜெட், கொள்கை முடிவுகள் போன்ற குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டுமே நிர்வாக குழு கையாளுகிறது. அதிலும், 2022 டிசம்பருக்கு பின் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பங்கேற்கவில்லை. அதனால், நிர்வாக குழுவின் உறுப்பினராக ஐ.ஐ.டி., இயக்குனர் இருக்கிறார் என்பதற்காக, அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கை மீது நம்பகத்தன்மை இல்லை என்று கூற முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

