UPDATED : ஆக 02, 2024 12:00 AM
ADDED : ஆக 02, 2024 09:19 AM
சென்னை:
உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு தேர்வாகி, இரண்டு ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருப்போர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் பங்கேற்ற, பணி நியமனத்திற்காக காத்திருக்கும் சரண்குமார் கூறியதாவது:
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, 2021ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 2022ல் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 97 பேருக்கு பணி பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, பணியில் தேர்வு செய்யப்படாதவர்கள் வழக்கு தொடர்ந்ததால், எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இரண்டு மாத்திற்குள் பணி நியமன ஆணை வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனாலும், பணியில் தேர்வு செய்யப்பட்டு காத்திருக்கும், 97 பேருக்கு பணி நியமன ஆணை வழங்காமல், அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக, அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளோம். மேலும், அரசை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு கூறினார்.