20 ஆண்டுகளாக காலியாக இருக்கும் தென் மாநில மொழிப் பேராசிரியர் பணியிடங்கள்
20 ஆண்டுகளாக காலியாக இருக்கும் தென் மாநில மொழிப் பேராசிரியர் பணியிடங்கள்
UPDATED : டிச 20, 2014 12:00 AM
ADDED : டிச 20, 2014 02:37 PM
புதுடில்லி: வட மாநிலங்களில் உள்ள பெரும்பாலான பல்கலைகழகங்களில் தென் மாநில மொழிகளுக்கான பேராசிரியர் பணியிடங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன.
உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இரு தமிழ் பேராசிரியர் பணியிடம்,அலகாபாத் பல்கலை கழகத்திலும் தமிழ்துறைக்கான பேராசிரியர் பணியிடங்களில் யாரையும் நியமிக்கப்படாமல் உள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூர் பல்கலை கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்துறை துவங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் இன்று வரையில் அப்பணியிடமும் நிரப்பப்பட வில்லை. கோல்கட்டா பல்கலைகழகத்தில் 4 இடங்களுக்கும், அசாமின் கவுகாத்தில் பல்கலையில் ஒரு இணை பேராசிரியர் பணியிடமும் காலியாகவே உள்ளது.
அதே போல் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் மலையாள மொழிக்கான பேராசிரியர் பணியிடத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் நேர்முகத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும் அவை கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. மேலும் இதே பல்கலையில் கன்னடமொழிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பேராசிரியர் பணியிடமும் வேறு துறைக்கு மாற்றப்பட்டு விட்டது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்த புரந்தரேஸ்வரி தெலுங்கு மொழிக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இது குறித்து டில்லி பல்கலையில் ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் மாரியப்பன் கூறுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் இருந்தால் தான் இட ஒதுக்கீட்டின் படி நியமனம் இருக்க வேண்டும் என வும், யாரும் இதை கணக்கில் கொள்வதில்லை என கூறினார்.
