20 பைசாவில் காய்கறி: மதிய உணவு திட்டத்தின் ‘கதி’ இது!
20 பைசாவில் காய்கறி: மதிய உணவு திட்டத்தின் ‘கதி’ இது!
UPDATED : டிச 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவுக்கு தேவையான காய்கறி வாங்க மிகக்குறைவான அளவே பணம் ஒதுக்குகிறது அரசு.
ஒரு மாணவருக்கு 20 பைசா மதிப்புக்கு மட்டுமே காய்கறி வாங்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இதை உயர்த்தித்தர முடிவு செய்துள்ளது மாநகராட்சி கல்விக்குழு.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
இந்தப் பள்ளிகளின் சத்துணவுக் கூடத்தை ஆய்வு செய்தால், அங்கு காய்கறி குறைவாக இருப்பது தெரிய வரும். அல்லது புழு, பூச்சிகளுடன் கூடிய காய்கறிகளையே பார்க்க முடியும். இதற்கு சத்துணவுக்கூடத்தில் உணவு சமைக்கும் பணியாளரை மட்டும் குறை சொல்ல முடியாது. இதற்கு அரசின் கொள்கை முடிவு கூட ஒரு காரணம்.
ஒரு மாணவருக்கு காய்கறி வாங்க 20 பைசா மட்டுமே செலவழிக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது அரசு. பள்ளியில் 100 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டால், வெறும் 20 ரூபாய்க்கு மட்டுமே காய்கறி வாங்கப்பட வேண்டும்; இந்த விலைக்கு காய்கறி வாங்கி, தரமான மதிய உணவு வழங்க முடியும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
இன்றைக்கு 20 ரூபாய்க்கு ஒரு கிலோ கத்தரிக்காய் கூட வாங்க முடியாது. பள்ளிகளில் தரமான காய்கறிகளுடன் கூடிய மதிய உணவை, மாணவர்களுக்கு அளிக்க வேண்டுமெனில், காய்கறி வாங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட பைசாவின் மதிப்பு உயர்த்தப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு மாநகராட்சிக் கல்விக்குழு, வரும் கவுன்சில் கூட்டத்தின் போது மதிய உணவுக்கு காய்கறி வாங்க ஒரு மாணவருக்கு 20 பைசா என நிர்ணயிக்கப்பட்டதை 50 பைசாவாக உயர்த்த வேண்டுமென தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில், “சந்தையில் காய்கறியின் விலை அதிகரித்துவருகிறது. அரசு நிர்ணயித்துள்ள விலையில், தரமான காய்கறிகளை வாங்கி, பள்ளிகளில் மதிய உணவுக்கு பயன்படுத்த முடியாது. இதனால், ஒரு மாணவருக்கு காய்கறி வாங்க 20 பைசாவில் இருந்து 50 பைசாவாக உயர்த்த வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரவுள்ளோம். இத்தீர்மானம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கே உள்ளது,” என்றார்.
