26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள்: வெலவெலக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்
26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள்: வெலவெலக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்
UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 10:07 PM
கிருஷ்ணகிரி:
தமிழக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த, 26 மாதங்களில், 221 போக்சோ வழக்குகள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில், கடந்தாண்டு ஆகஸ்டில் போலி என்.சி.சி., முகாமில், 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், முக்கிய குற்றவாளி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரிழந்தார்.
கூட்டு பலாத்காரம்
இச்சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள், பர்கூர் தாலுகா ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 13 வயது மாணவியை, கூட்டு பலாத்காரம் செய்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, கடந்த 5ம் தேதி கைதாகினர்.
அதேபோல, கிருஷ்ணகிரி அருகே பத்தாம் வகுப்பு மாணவருக்கு, அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் உசேன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் ஓசூரை சேர்ந்த, 11 வயதான, ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஒன்பது, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவன் என, மூன்று பேர் கைதாகினர்.
இப்படி அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கிராமங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியுலகிற்கு வராமல், கட்டப்பஞ்சாயத்து செய்து மறைக்கப்படுகின்றன.
மாவட்டத்தில், 2023 முதல் தற்போது வரையிலான, 26 மாதங்களில், 18 வயதிற்கு உட்பட்ட மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 221 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிக பட்சமாக கடந்தாண்டு, 130 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஓசூர் ஆராதனா சமூக சேவை மற்றும் திறன் மேம்பாடு அறக்கட்டளை நிறுவனரும், மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் சேவை வழங்குனருமான ராதா கூறியதாவது:
பெற்றோர் புகாரில், மாயமான மாணவியை போலீசார் கண்டறிந்து மீட்க ஒரு மாதம் வரை ஆகிறது. அதற்குள் மாணவி பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி விடுகிறார். மாணவி அல்லது சிறுமி மாயமானவுடன், போலீசார் வேகமாக நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் சிறுமியரை கண்காணிக்கவோ, விசாரிக்கவோ, கவுன்சிலிங் கொடுக்கவோ, மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் இல்லை.
ஓராண்டாக, திருவண்ணாமலையில் இருந்து தான் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் வருகின்றனர். அதுவும் மூன்று மாதமாக வருவதில்லை.
நலக்குழு இல்லை
சீண்டலுக்கு ஆளாகும் மாணவி அல்லது சிறுமியிடம், நேரில் வராமல், குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள், மொபைல்போனில் வீடியோ காலில் பேசுகின்றனர். அது சரியாக இருக்காது. தர்மபுரி மாவட்டத்திலும், குழந்தை கள் நலக்குழு அலுவலர்கள் இல்லை. சேலத்திலிருந்து தான் வந்து செல்கின்றனர்.
பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்படுவோரை மீட்டு, ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் காப்பகத்தில் ஒப்படைக்கின்றனர். அதைப்பார்த்து ஆதரவற்ற குழந்தைகளும் மனமுடையும் வாய்ப்புள்ளது.
பாலியல் ரீதியாகவும், குழந்தை திருமணத்தாலும் பாதிக்கப்படுவோரை, அதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி, மனநல ஆலோசகர் வாயிலாக, கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.