பெங்களூரில் மொபைல்போன் உற்பத்தி மையம்; 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு!
பெங்களூரில் மொபைல்போன் உற்பத்தி மையம்; 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு!
UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 10:08 PM
மல்லேஸ்வரம்:
பெங்களூரில் துவங்கப்படும் மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலையால் 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் மொபைல்போன் உற்பத்தி ஆலை துவங்கப்பட உள்ளது. இதன் மூலம் 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். அடுத்த முறை பெங்களூரு வரும்போது, அந்த தொழிற்சாலையை பார்வையிடுவேன்.
மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மொபைல்போன், மின்னணுவியல், காலணி துறைகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.
கர்நாடக ரயில்வேக்கு, 7,564 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், 850 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அம்ருத் நிலைய திட்டத்தின் கீழ், 61 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலத்தில், 1,652 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன; இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
புறநகர் ரயில்வே திட்டத்துக்கு 15,762 கோடி ரூபாயும், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 15,611 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் காலத்துக்கு பிறகு அமைந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக இருந்தது. பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி, ஆண்டுதோறும் நெடுஞ்சாலைகள், ரயில்வே துறைகள், விமான நிலையங்களை மேம்படுத்தினார்.
பிரதமரின் நலத்திட்டங்கள், மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளது. ஜன்தன், உஜ்வாலா, ஜல் ஜீவன் போன்ற திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி உள்ளது. குறிப்பாக பட்ஜெட்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பொருளாதார யோசனை, பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மொபைல்போன் அழைப்பில் இடையூறுகள் இருந்தன. தற்போது 5ஜி நெட்ஒர்க் கிடைத்து உள்ளது.
பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.எம்.,கள், - ஐ.ஐ.டி.,க்கள், மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளன. இம்முறை ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்டண உயர்வுக்கு மாநில அரசே பொறுப்பு
அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு கமிட்டி புதுடில்லியில் இல்லை; பெங்களூரில் தான் உள்ளது. மெட்ரோ தொடர்பான முடிவுகளை மாநில அரசே எடுக்கும். மெட்ரோ தொடர்பான பிரச்னைகளுக்கு மாநில அரசே காரணம். மத்திய அரசு தான் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்தது என்பது பொய்யான தகவல் என்றார்.