பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 01:41 PM

சத்தியமங்கலம்:
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில், 8 பேருக்கு முனைவர் பட்டம், 99 பேருக்கு முதுநிலை பட்டம், 1,410 பேருக்கு இளநிலை பட்டம் என மொத்தம் 1,517 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவர் எஸ். வி பாலசுப்ரமணியம் வரவேற்று பேசுகையில், ''வெற்றியை நோக்கிய வாழ்நாள் பயணத்தில் கற்றல் என்பது மிக முக்கியமானது. வாழ்வில் சிறந்து விளங்க புதுமையான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்'', என்றார்.
விழாவில் பட்டங்களை வழங்கி, ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு பேசியதாவது: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, ஒரு கல்லூரி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது. அதற்கு, கல்லூரியின் இயற்கை சூழல், உலகத்தரம் வாய்ந்த வளாக அமைப்பு மற்றும் மாணவர்களின் பொறியியல் செய்முறை பயிற்சிகள் அனைத்தும் காரணமாக அமைகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகின்றனர்.
மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கை உடைய வளர்ந்த நாடுகளை காட்டிலும், இந்தியா அதிக மக்கள் தொகையையும், பொறியாளர்களையும் கொண்டுள்ளது. குறைவான பொறியாளர்களைக் கொண்ட நாடுகளே உலகத்தரம் வாய்ந்த மென்பொருட்களை உருவாக்கும்போது, நமது நாட்டில் அதைவிட சிறந்த மென்பொருட்களை உருவாக்க முடியும். இந்திய இன்ஜினியரிங் பட்டதாரிகள், உலகில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும், அவற்றின் தயாரிப்புகளுமே போட்டியாக இருக்க வேண்டும். அவற்றவிட அதிக திறன் கொண்ட தயாரிப்புகளில் இந்திய மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும் என்ற நமது பிரதமர் மோடியின் கனவை பொறியாளர்களான நீங்கள் நனவாக்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஆர். வி. ரமணி பேசுகையில், ''பொறியாளர்களுக்கு செயலில் நம்பிக்கையும், ஆர்வமும் கடின உழைப்பும் அவசியம். சிறந்த வாழ்க்கைக்கு நல்ல நெறிமுறை மற்றும் குடும்பப் பற்று, தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். அதேநேரம் எளிமையும், பணிவும், பொறுமையுமே வாழ்க்கைக்கான திறவுகோல்'', என்று தெரிவித்தார்.
விழாவில், சுந்தர் எண்டர்பிரைசஸ் நிறுவனரும், சி.டி.ஐ.ஐ.சி.,ன் இயக்குனருமான சுந்தரம், பிரிகால் நிறுவனர் டாக்டர் விஜய் மோகன், கல்லூரியின் அறங்காவலர் டாக்டர் எம் பி விஜயகுமார் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு), கல்லூரி முதல்வர், டீன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.