UPDATED : நவ 24, 2024 12:00 AM
ADDED : நவ 24, 2024 10:01 AM
சென்னை:
முதல்வரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ், 25 இளம் வல்லுனர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக சேர்த்து, இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட, 30 இளம் வல்லுனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, முதல்வரின் புத்தாய்வு திட்டத்தை, 2024- - 26-ல் மீண்டும் செயல்படுத்த, பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. 5,327 பேர் பங்கேற்ற தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 இளம் வல்லுனர்களின் பட்டியல், கடந்த 22ம் தேதி வெளியிடப்பட்டது.
அவர்களுக்கு அரசின் உயர் அலுவலர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள் வாயிலாக, 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியும் மற்றும் மாவட்டங்களில் துறை ரீதியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
அதன்பின், 25 இளம் வல்லுனர்களும் அரசு துறை திட்டங்களில், இரண்டு ஆண்டுகள் இணைந்து செயல்படுவர். மேலும், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் வாயிலாகவும், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.