ரிசர்வ் வங்கியின் வினாடி - வினா கொச்சியில் நாளை இறுதி போட்டி
ரிசர்வ் வங்கியின் வினாடி - வினா கொச்சியில் நாளை இறுதி போட்டி
UPDATED : நவ 24, 2024 12:00 AM
ADDED : நவ 24, 2024 10:02 AM

சென்னை:
இந்திய ரிசர்வ் வங்கி நடத்தும் வினாடி - வினா போட்டியின் இறுதி சுற்று நாளை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கை: இந்திய ரிசர்வ் வங்கியின், 90வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, இளங்கலை மாணவர்களுக்கான நாடு தழுவிய வினாடி வினா போட்டி நடந்து வருகிறது. இணையவழியில் நடத்தப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், மாநில அளவிலான போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மாநில அளவிலான சுற்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அதில், 168 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த சுற்றில், காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கழக மாணவர்கள் தருண் ஆர் ஜெயின், அஸ்மித்குமார் சாஹு வெற்றி பெற்றனர்.
மேலும், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி மற்றும் நாமக்கல் பி.ஜி.பி., வேளாண்மை கல்லுாரி மாணவர்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினர், கேரள மாநிலம், கொச்சியில் நாளை நடக்கும் தேசிய அளவிலான இறுதி சுற்றில் பங்கேற்க உள்ளனர். இதில் முதல் பரிசு 2 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாய்; மூன்றாம் பரிசு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.