இலவச கல்வியில் 25 சதவீத ஒதுக்கீடு: கோவையில் 2,800 பேர் விண்ணப்பம்
இலவச கல்வியில் 25 சதவீத ஒதுக்கீடு: கோவையில் 2,800 பேர் விண்ணப்பம்
UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 10:24 AM

பொள்ளாச்சி:
தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில் கல்வி பெற இதுவரை, 2 ஆயிரத்து, 800க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 2024--25ம் கல்வி ஆண்டுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஏப்.,22 முதல் மே 20ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 325 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புக்கு 15 ஆயிரத்து 347 இடங்கள் உள்ளன. இதில், 25 சதவீத ஒதுக்கீட்டில் இலவச கல்வி பெற மூன்றாயிரத்து 879 இடங்கள் உள்ளன.
கடந்த திங்கள்கிழமை முதல் இலவச கல்வி பெற விண்ணப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெற்றோர் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற கடந்த 4 நாள்களில் 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் உள்ள நிலையில், தொடர்ந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன என்றனர்.