நீட் தேர்வு எழுதும் 371 அரசு பள்ளி மாணவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி
நீட் தேர்வு எழுதும் 371 அரசு பள்ளி மாணவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி
UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 10:20 AM

கோவை:
கோவை மாவட்டத்தில், 371 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.
2023-2024ம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்து நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவ, மாணவியருக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் நீட் பயிற்சி பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதனடிப்படையில், கோவை சி.சி.எம்.ஏ. பள்ளி, பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் பள்ளி, மேட்டுப்பாளையத்தில் ஜி.ஹெச்.ஹெச்.எஸ். ஆண்கள் பள்ளி என, மூன்று பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மே 2ம் தேதி வரை, நீட் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
மே 5ம் தேதி, நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்வினை 371க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். இதில், 250க்கும் மேற்பட்டோருக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்த நாட்களில் சிறந்த பயிற்சி
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், கோவை மாநகர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று பயிற்சி மையங்களில் சுமார், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இப்பயிற்சி வழங்குவதற்காக, தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்விக்கென நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீட் பயிற்சிக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், மாணவர்கள் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.