2,642 டாக்டர்கள் விரைவில் நியமனம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
2,642 டாக்டர்கள் விரைவில் நியமனம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:52 AM
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு, அல்பெண்டசோல் மாத்திரை வழங்கும் முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
அல்பெண்டசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரை, 1.16 லட்சம் மையங்களில், 2.69 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக, 1.30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் விடுபட்டவர்களுக்கு, வரும் 17ம் தேதி சிறப்பு முகாமில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பணியிடங்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது. இதில், 24,000 டாக்டர்கள் பங்கேற்றனர்.
தற்போது கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. எனவே, 2,642 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதற்காக, 4,585 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். நாளை முதல் 15ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும். அப்பணி முடிந்ததும், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி, தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இவர்களுக்கு, 20ம் தேதிக்கு பிறகு கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்படும். கடந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட, 1,021 டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.