மருத்துவ கல்வி இயக்குநருக்கு எதிரான போராட்டம் வாபஸ்
மருத்துவ கல்வி இயக்குநருக்கு எதிரான போராட்டம் வாபஸ்
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:51 AM
சென்னை:
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் வருத்தம் தெரிவித்ததால், அவருக்கு எதிரான போராட்டத்தை டாக்டர்கள் வாபஸ் பெற்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு கோரி, டாக்டர்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து, சேலத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமி நரசிம்மன் போராடினார். அப்போது அவர் மீது எடுக்கப்பட்ட பணியிட மாறுதல் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், 2020ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி அளித்த பேட்டியில், டாக்டர் லட்சுமி நரசிம்மன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க அரசு தயாராக இருந்த போது, அவர்கள் ஏற்கவில்லை. ஊதிய உயர்வு தொடர்பாக, அரசு டாக்டர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை என, தெரிவித்து இருந்தார்.
இதற்கு, லட்சுமி நரசிம்மன் குடும்பத்தினர், அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தினர், மருத்துவ கல்வி இயக்ககத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். உடனடியாக அவர்களிடம், மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி பேச்சு நடத்தினார்.
அப்போது, 1 கோடி ரூபாய் கொடுத்ததாக தெரிவித்த தவறான கருத்துக்கு, வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால், டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். அதேபோல, அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளையும், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது பற்றி சங்குமணி கூறுகையில், இந்த சம்பவத்தில் டாக்டர்கள் சங்கத்தினருடன் பேசி, வருத்தத்தை பதிவு செய்தேன். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். பிரச்னை முடிந்து விட்டது என்றார்.