UPDATED : ஜூலை 09, 2026 05:32 PM
ADDED : ஜூலை 09, 2026 05:33 PM
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி ஒன்றியத்தில் நடுப்பட்டி ஊராட்சியில் தாதம்பட்டி, போத்தம்பட்டி ஊராட்சியில் சிரங்கம்பட்டியில் செயல்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டன. செல்லம்பட்டி ஒன்றியத்தில் வேப்பனுாத்து ஊராட்சி ஓணாப்பட்டி கிராம துவக்கப்பள்ளியும் பூட்டப்பட்டது.
மின்னல்கொடி, தாதம்பட்டி:
தாதம்பட்டியில் 65 ஆண்டுகளுக்கு முன்பாக கிராம மக்கள் ஒருங்கிணைந்து பள்ளியை துவக்கினர். ஆங்காங்கே கிராமங்களில் பள்ளிகள் துவக்கப்பட்ட நிலையில் இங்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்தாண்டு 10 மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்துவிட்டதால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது.
காசிமாயன், சிரங்கம்பட்டி:
வேலைவாய்ப்புக்காக கிராமத்தில் உள்ளவர்கள் வெளியேறியதை தொடர்ந்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இக்கிராம மாணவர்கள் சிலர் அருகில் உள்ள குருவிளாம்பட்டி பள்ளியில் சேர்ந்துள்ளனர். காலை, மதிய உணவு, புத்தகங்கள், சீருடைகள் வழங்கியும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முத்தையா ஓணாப்பட்டி:
ஊரில் 80 வீடுகள் உள்ளன. ஆனால் 30 குடும்பத்தினர்களே இங்கு வசிக்கின்றனர். கடந்த ஆண்டும் குறைவான மாணவர்கள் படித்தனர். அவர்களும் 5ம் வகுப்பு முடித்து விட்டு சென்றனர். அடுத்து பள்ளிக்குச் செல்லும் அளவில் குழந்தைகள் இல்லை. சிறுவயது குழந்தைகளுக்கு இருந்த ஊட்டச்சத்து மையமும் பூட்டப்பட்டது. அவர்களை பேயம்பட்டியில் உள்ள மையத்திற்கு அனுப்பி வருகிறோம். தற்போது பள்ளி பயன்பாட்டில் இல்லாததால் மாடுகள் கட்டும் இடமாக மாறிவிட்டது. இவ்வாறு கூறினர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த கிராமங்களில் ஆசிரியர்களுடன் சென்று மக்களிடம் பேசியும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. இங்கு பணிபுரிந்த ஆசிரியர்களை கூடுதல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மாறுதல் செய்துள்ளோம்” என்றனர்.
